40 தொகுதிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தல்

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதில், தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது.

இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் அந்த மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்துவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன.

அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, தேர்தல் திருவிழாவை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இக்கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி விஞ்ஞான் பவனில், 17வது மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

முதல் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நடக்கிறது. மே 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அப்போது, நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியும். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அன்றைய தினமே, காலியாக உள்ள 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது.

வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 29. இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியும், 4ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் மே 6ம் தேதியும், 6ம் கட்ட தேர்தல் மே 12ம் தேதியும், 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் மே 19ம் தேதியும் நடக்கிறது.

அதிகப்பட்சமாக பீகார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதற்கும் முன்அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இம்முறை விதிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பொதுமக்கள் வாக்களிக்க 10 லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. பாதுகாப்புக்கு பல லட்சம் போலீசார், துணை ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். பதற்றமான பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு, பட்டியல் தயார்நிலையில் உள்ளது. இப்பகுதி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஏற்கனவே கொதித்து கொண்டிருக்கும் தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2வது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைக்க பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், மோடி ஆட்சியை அகற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்து வருகின்றன. தற்போது இரு தரப்பிலும் ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகி, முழு வீச்சில் பிரசாரமும் நடந்து வருகிறது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜ 282 இடங்களில் வெற்றி பெற்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மை அந்தஸ்தை பெற்று ஆட்சி அமைத்தது. பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி 543 தொகுதிகளில் 336ஐ கைப்பற்றியது. காங்கிரஸ் முதல் முறையாக மிக குறைந்த எண்ணிக்கையில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. போட்டியிட்ட 8,251 வேட்பாளர்களில் 7,000 பேர் டெபாசிட் பறிகொடுத்தனர்.

ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் இமாலய வெற்றியுடன் ஆட்சியை பிடித்த பாஜ, தனது ஆட்சியில் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கையாலும், வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத சரிவை கண்டிருப்பதாலும் இம்முறை கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேசமயம், மதச்சார்பற்ற கட்சிகள் பாஜ.வுக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான கூட்டணியை அமைத்திருக்கின்றன. இதனால் கடும் சவால் கொண்டதாக மக்களவை தேர்தல் இருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

லீவை அனுபவிங்க… ஓட்டு போடுங்க…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் தினத்துகஅகு முன்பும் பின்பும் விடுமுறை தினங்கள் வருவதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17ம் தேதி (புதன்கிழமை) மகாவீர் ஜெயந்தியன்று தமிழக அரசு விடுமுறை நாளாகும்.

மறுநாள் வாக்குப்பதிவுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை. மறுநாள் புனித வெள்ளியன்று அரசு விடுமுறை. தொடர்ந்து ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை என நீண்ட விடுமுறை கிடைக்கிறது. இதனால் தொடர் விடுமுறையை அனுபவித்தபடி ஜனநாயக கடமையை ஆற்றுங்க.

ஆந்திரா, ஒடிசா உட்பட 4 மாநிலங்களுக்கு தேர்தல்

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் பதவிக்காலமும் விரைவில் முடிகிறது. அதேபோல், காஷ்மீர் மாநிலத்திலும் ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. எனவே, மக்களவை தேர்தலுடன் இந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை.

Related posts