எத்தியோப்பியா விமான விபத்தில் 157 பயணிகள் பலி

எத்தியோப்பியாவில் இன்று நடந்த விமான விபத்தில் கனடா, சீனா, அமெரிக்க, கென்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாட்டவர்கள் என மொத்தம் 157 பேர் பலியானார்கள். இதில் இந்தியர்கள் 4 பேரும் பலியாகி உள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் இன்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது.

உள்ளூர் நேரப்படி 8.38 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. நகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள் என்றும் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன என்றும் எத்தியோப்பியா அரசு தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர் பலியானார்கள்.

தவிர கனடா நாட்டைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா மற்றும் ஸ்லோவோகியா நாட்டைச்சேர்ந்த 4 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, விமானம் புறப்பட்ட 50 கி.மீ தொலைவிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதால், விசாரணை நடந்து வருகிறது.

Related posts