நல்ல கணவர்களை உருவாக்குவதில் சமுதாயம் தோல்வியடைந்துள்ளது

நல்ல கணவர்கள் அதிகம் இல்லை என நடிகை ஜெயப்பிரதா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தற்போது டி.வி. தொடர் ஒன்றில் மருமகளுக்கு துரோகம் செய்யும் மகனை கொலைசெய்பவராக நடித்து இருக்கிறார். இதுகுறித்து ஜெயப்பிரதா அளித்த பேட்டி வருமாறு:-

“கணவர் எப்படி இருந்தாலும் மனைவி அனுசரித்து போக வேண்டும் என்றும், சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லித்தான் பல நூற்றாண்டுகளாக பெண்களை வளர்க்கிறார்கள். அப்படி பெண்களுக்கு புத்தி சொல்லி வளர்க்கும் பெற்றோர் மகன்களை அப்படி வளர்ப்பது இல்லை.

மகனிடம் தவறு இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியாரைத்தான் சமூகத்திலும், சினிமாவிலும் டி.வி தொடர்களிலும் பார்க்கிறோம். மகனை கண்மூடித்தனமாக நம்புவது தவறு. பிறந்த வீட்டில் இருந்து செல்லும் பெண்களிடம் புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள். அது தவறு இல்லை.

அதுபோல் ஆண்களையும் நல்ல மருமகனாக, நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல மனைவிகளை உருவாக்கும் நமது சமூகம் நல்ல கணவர்களை தயார் செய்வதில் தோல்வி அடைந்து இருக்கிறது என்பது எனது கருத்து. நல்ல கணவர்கள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதிகமாக இல்லை.”

Related posts