’அந்திமழை பொழிகிறது’ பாட்டுக்காக 32 டியூன்!

’ராஜபார்வை’ படத்தில், ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலுக்காக, இளையராஜா 32 டியூன் போட்டார் என்று கமல் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இதையொட்டி, தனியார் சேனல் சிறப்பு நிகழ்ச்சியையொட்டி, பிரசாத் ஸ்டூடியோ லேப்பில் கமலும் இளையராஜாவும் சந்தித்துப் பேசிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது கமல் தெரிவித்ததாவது:

இளையராஜா 75 விழா, நல்லவிஷயம்தான். இன்னும் ஒரு 25 வருடங்கள் கழித்து நடத்தியிருந்தால், அவருடைய இசைக்கு 75 வயது ஆகியிருக்கும். இந்தி இசையின் பக்கம், தமிழர்கள் மனதைக் கொடுத்திருந்த வேளையில், ‘மச்சானைப் பாத்தீங்களா’ பாடல் மூலம், மொத்தத் தமிழகத்தையும் தன் இசையின் பக்கம் கொண்டுவந்தார் இளையராஜா.

அவர் சினிமாவுக்கு இசையமைக்க வருவதற்கு முன்பே, அவருடைய ‘பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழு நடத்துகிற கச்சேரிகளில், நானும் பாடியிருக்கிறேன். அப்போது, ‘அன்னக்கிளி’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தபோது, அவர்களில் யார் இளையராஜாவானது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போது அமர்தான் (கங்கைஅமரன்) இளையராஜா என்று நினைத்துக்கொண்டேன். பிறகுதான் இளையராஜாவைத் தெரிந்துகொண்டேன்.

ஒவ்வொரு முறை என்னுடைய படங்களுக்கு இளையராஜா இசையமைக்கும் போதும், அவரிடம் இருந்து பெஸ்ட்டிலும் பெஸ்ட் பாடல்களைப் பிடுங்கிக்கொள்ளவேண்டும் என்று எனக்கொரு ஆசை. அவரை விடவே மாட்டேன்.

அப்படித்தான், ‘ராஜபார்வை’ படத்துக்கு ‘அந்திமழை பொழிகிறது’ பாடலைக் கொடுத்தார். முதலில் 32 டியூன்கள் போட்டார். இது வேணாம், வேற, இதுவேணாமே வேற… என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் அதன்பிறகு 32 டியூன்களும் மிகப்பிரமாதமான பாட்டுகளாகி, வெவ்வேறு படங்களில் வெளியாகி, ஹிட்டாகின என்பது எனக்குத்தான் தெரியும்.

ஆனால் கோபப்படவே இல்லை. சலித்துக்கொள்ளவும் இல்லை. ‘அந்திமழை பொழிகிறது’ டியூனைக் கொடுத்தார். அதிலும் அந்தப் பாட்டுக்கு முன்னதான இசையே, மிகப் பிரமாண்டமாக, மனதை அதிரச்செய்யும்படி அமைந்தது’’

இவ்வாறு கமல் தெரிவித்தார்

Related posts