விஜயகாந்த் 7 தொகுதிகளை கேட்டு பிடிவாதம்

அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளைக்கேட்டு விஜயகாந்த் பிடிவாதமாக இருப்பதால் அதிமுக தலைமை பரிதவித்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் திமுக, அதிமுக முனைப்பு காட்டி வரும் நிலையில் முதற்கட்ட ரேஸில் அதிமுக முந்தியது. பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் திமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதையடுத்து விட்டதைப் பிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தலைமை முயன்றது. ஆனால் தேமுதிக ஒத்துவராததால் தன்னிடம் உள்ள கட்சிகளுடன் கூட்டணியை இறுதிப்படுத்தி முடிவுக்கு கொண்டுவந்தது திமுக.

அதே நேரம் அதிமுக அமைச்சர் தங்கமணி தலைமையில் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விஜயகாந்த் சற்றே இறங்கி வந்ததால் அதிமுக தலைமை உற்சாகமடைந்தது.

ஆரம்பத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய மாட்டேன், 21 தொகுதிகளில் தாங்கள் போட்டியிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் 8 இடம் ஒதுக்க வேண்டும், பாமகவை விட அதிக தொகுதிகள் வேண்டும் போன்ற கோரிக்கைகளை பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு சாதகமாக மாற்றி அதிமுகவுக்கு இணக்கமான மனநிலைக்குக் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் விரைவில் வரும் என அதிமுக அமைச்சர்கள் பேசிவந்தனர். இன்று மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதால் அதற்குள் தேமுதிகவுடனான கூட்டணியை இறுதிப்படுத்தவேண்டிய நிலையில் அதிமுக தலைமைக்கு நெருக்கடி உண்டானது.

அதிமுக தலைவர்களின் தொடர் பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் தரப்பில் பாமகவைவிட அதிக தொகுதி அல்லது அதே அளவிலான தொகுதிகள், ராஜ்யசபா தொகுதி ஒன்று, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகிதம் என கோரப்பட்டது.

இதில் பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளை அளிக்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு குறித்து பின்னர் பேசலாம் எனக் கூறப்பட்டதாகவும், ராஜ்ய சபா சீட்டுக்குப் பதில் மத்திய அரசின் வாரியத்தலைவர் பதவிகள் 2 வழங்குவதாகவும் பாஜக தலைமையிடமும் பேசி தேமுதிகவை இணங்க வைத்துள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியானது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததை அடுத்து அதை உறுதிப்படுத்தவே ஓபிஎஸ் சென்றுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியானது.

தேமுதிக தரப்பில் ஓபிஎஸ் வந்தபோது அரசியல்தான் பேசப்பட்டது என பத்திரிகைகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதன்மூலம் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தும் கைகோப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று தனது கட்சியில் நிர்வாகிகளை சந்தித்த விஜயகாந்த் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அதிமுக கூட்டணியில் இணைவது நமது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. விட்டுக்கொடுத்து கட்சியை பவரில் கொண்டு சாதிக்க நடைமுறை தந்திரத்தை உருவாக்கினால் என்ன தவறு என்று தலைமை தரப்பில் கேள்வி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அப்படியானால் கடந்த முறை 14 தொகுதிகளில் போட்டியிட்ட நமக்கு கூடுதலான கவுரமிக்க தொகுதிகள் வேண்டும், பாமக 8 தொகுதிகளில் போட்டியிட்டது, தற்போது 7 தொகுதிகளை பெற்றுள்ளது. நாம் 8 தொகுதிகளாவது கேட்டுப்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததாக தேமுதிக வட்டார தகவல் தெரிவிக்கிறது.

இதையடுத்து 8 தொகுதி அல்லது 7 தொகுதி என்பதில் தேமுதிக உறுதியாக நின்றுவருகிறது. தேமுதிக 5 தொகுதிகளுக்கு சம்மதிக்கும் என நினைத்து கூட்டத்தில் கொடி கட்டி பேனரும் ரெடிப்பண்ணி தயாராக இருந்த அதிமுக தலைமைக்கு இது புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது.

திமுக கதவை மூடிய நிலையில் தேமுதிக தன்னிடம் வந்தாகவேண்டும் என அதிமுக நினைக்க, மெகா கூட்டணி 21 சட்டமன்ற தொகுதிகளில் வென்றாக நம்மை நாடி வரவேண்டும் என தேமுதிக தலைமை நினைக்க இழுபறி நீடிக்கிறது.

தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தபோது விஜயக்ந்ந்த், பிரேமலதா, சுதீஷ் கூட்டணி ஆலோசனையில் தொடர்ந்து உள்ளதாக கூறப்பட்டது. அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முதல்வர் இல்லத்தில் ஆலோசனையில் உள்ளனர்.

5 தொகுதியா 7 தொகுதியா? என்கிற இழுபறி முடிந்தால் விஜயகாந்த் மேடை ஏறுவார். இல்லாவிட்டால் இன்றோடு அனைத்தும் முடிந்துவிடும்.

Related posts