வடகொரிய தலைமையின் தகுதிக்குறைவால் பட்டினி..

வடகொரியாவில் சென்ற ஆண்டு உணவு உற்பத்தி மிகவும் மோசமாகியிருப்பதாக ஐ.நாவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

சென்ற ஆண்டு விவசாய உற்பத்தி 4.95 மில்லியன் தொன்களாகும், இது அதற்கு முந்தய ஆண்டுடன் ஒப்பிட்டால் ஐந்து லட்சம் தொன்கள் குறைவாகும்.

சென்ற ஆண்டு மட்டும் ஆறு இலட்சம் மக்கள் புதிதாக பட்டினி கிடப்போர் தொகைக்குள் வந்துள்ளார்கள்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 43 வீதமானவர்கள் பட்டினி வாழ்வு வாழ்கிறார்கள், இவர்களுடைய உயிர்கள் அவமாக பிரிந்து போகாமல் தக்கவைக்கும் உணவு உதவி மட்டும் வழங்கப்படுகிறது.

வடகொரியா மீது அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மோசமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது தெரிந்ததே. இதன் காரணமாக அந்த நாட்டை நிர்வகிக்க முடியாது இளம் தலைவரான கிம் யோங் உன் தடுமாறுகிறார்.

இவ்வளவு தடைகள் இருக்க புத்திசாலியாக இருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்..?

நாட்டின் விவசாயத்தை பெருக்கி வறுமையை போக்கடித்து மக்களை காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால் விவசாயத்தை நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கி பட்டினியை வெற்றி கொள்ளும் வல்லமை இல்லாத பெரும்பாலான ஆசிய நாடுகளின் தலைவர்கள் போலவே சக்கட்டை தலைவராக இவரும் இருந்துள்ளார்.

நாட்டின் கல்வி சரியாக இருந்தால் வயலில் அறுவடை சரியாக இருக்கும். வயிற்றுப் பசியை போக்கத் தெரியாத படிப்பு படித்து அலையும் ஆசிய பாடசாலைகளின் கறிக்குதவாத ஏட்டுக்கல்வி படிப்பால் இறுதி உற்பத்தியை தர முடியவில்லை.

வறுமை.. வேலையின்மை.. பட்டினி.. ஒரு நாட்டில் நிலவுகிறதென்றால் தகுதியற்ற தலைமைகள் அந்த நாட்டின் அதிகாரக்கட்டிலில் இருக்கிறது என்பது பொருளாகும்.

இப்படித்தான்..

சீனாவின் பழைய தலைவர் மா ஓ சே துங் காலத்தில் அணு குண்டு உருவாக்கத்திற்கு பணத்தை பாவித்ததால் பல மில்லியன் சீனர்கள் செத்து தொலைந்தாக சமீபத்தில் வெளியான ஒரு நூல் கூறுகிறது. அதுபோல ஒரு சூழல் இப்போது வடகொரியாவில் இருப்பதை ஐ.நாவின் அறிக்கை காட்டுகிறது.

இதற்குள் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை முறிந்த பின்னர் வடகொரியா மறுபடியும் அணு ஆயுத உருவாக்கம், ஏவுகணை பறப்பு முயற்சிகளில் குதித்துள்ளதாக காலை அமெரிக்க செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் சற்லைற் அவதானிப்பு, வடக்கு 38 பிரிவு கூறும்போது வடகொரியாவின் ரொங்சாங் றி பகுதியில் ஏவுகணைப்பிரிவு பரபரப்பாக செயற்படுவதாகக் கூறுகிறது.ஆனால் வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணையின் மூலக்கருவறை யொங் பயோனில்தான் இருக்கிறது அங்கு பரபரப்பு குறைவாகவே உள்ளது.

நேற்று பொக்ஸ் நியூசிற்கு பேட்டியளித்த அமெரிக்க படைத்துறை ஆலோசகர் யோன் பொல்ரன் வட கொரிய இது போன்ற செயல்களை மீண்டும் ஆரம்பித்தாலும், ஏவுகணை பரிசோதனையில் இறங்குமென தாம் கருதவில்லை என்றும், மறுபுறம் வடகொரியா மீது மேலும் புதிய தடைகள் வரவிருப்பதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு தடைகள் வந்தால் இப்போது மத்திய கிழக்கு ஏமன் நாடு பட்டினியில் அழிந்தது போன்ற நிலைதான் வடகொரியாவிலும் வரும்.

முன்னைய செய்திகளின்படி முழுமையாக பொருளாதார தடைகளை விலத்தினாலே அணு குண்டு உருவாக்கத்தை நிறுத்துவோம் என்று வடகொரியா கேட்பதாக அமெரிக்கா கூறியிருந்தது..

ஆனால் முழுமையாக பொருளாதார தடைகளை அகற்றும்படி கேட்கவில்லை சில தடைகளை அகற்றுங்கள் என்றுதான் தாம் கேட்டதாக வடகொரியா கூறுகிறது.

இருவரும் பொய் கூறுகிறார்கள்.

பின்னால் ரஸ்யா, சீனா இரு நாடுகளின் மாயக்கரங்கள் தெரிகிறது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கூறும்போது தடைகளை உடன் விலத்த முடியாது ஏனென்றால் பல தடைகள் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் போடப்பட்ட தடைகள், பல நாடுகள் இணைந்து போட்ட தடைகள் அவைகளை. அமெரிக்கா நினைத்ததும் தானாகவே தளர்த்த முடியாது என்று தெரிவிக்கிறார்.

யார் என்ன நியாயம் கூறினாலும்..

இப்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உருவாகியுள்ள முறுகலுக்கு வடகொரியா பலிக்கடா ஆகியிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.

தொகுத்துப் பார்த்தால் வடகொரிய தலைவரின் அரசியல் இருத்தலானது தூரப்பார்வையில் ஆரோக்கியமாக இல்லை. சீனா தனது கனவுகளை எட்டித் தொடும்வரையே வடகொரிய சர்வாதிகாரத்தின் எதிர்காலம்..

மேலை நாடுகள் வடகொரிய சர்வாதிகார தலைமையை அகற்றவே முயல்கிறார்கள்..

இதுதான் பிரச்சனையின் ஆணி வேராக இருக்கிறது.

மக்கள் சாகிறார்களே என்பது பிரச்சனையல்ல சாகத்தானே மக்கள் இருக்கிறார்கள்..

அலைகள் 06.03.2019

Related posts