பெங்களூருவில் போட்டியிடும் பிரகாஷ் ராஜ்

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜூவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிகிறது.

கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவின் நடவடிக்கைகளை சாடி வருவதால் கர்நாடகாவில் பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். பெங்களூரு மத்திய தொகுதியில் தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. பெங்களூருவில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவு பிரகாஷ் ராஜூக்கு மிக முக்கியம். ஆனால் தங்கள் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே பிரகாஷ் ராஜூக்கு ஆதரவு அளிக்க முடியும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

இந்தநிலையில் பிரகாஷ் ராஜூக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து கர்நாடக மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய குழுவிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் ‘‘பெங்களூரு மத்திய தொகுதியில் எங்கள் கட்சிக்கு பெரிய ஆதரவு தளம் இல்லை. இருப்பினும் கொள்கையளவில் பிரகாஷ் ராஜூக்கு ஆதரவு தர தயாராகி வருகிறோம்’’ எனக் கூறினார்.

Related posts