மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவைத் தொகுதி ஒதுக்குவது என முடிவானது. மனநிறைவோடு இதை ஏற்றுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.

திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி, முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இருப்பது மதிமுகவும், மமகவும் மட்டுமே. மமகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு வருவதால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஆனால் திமுக கூட்டணியிலேயே பிரதான கட்சி என கருதப்படும் மதிமுக ஏற்கெனவே தங்களுக்கு ஐந்து தொகுதிகள் வேண்டும் என்று கூறி வந்தது.

மதிமுகவுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. மற்ற கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி ஒதுக்கிய நிலையில் மதிமுகவுக்கும் 2 தொகுதி என்பது வைகோவுக்கு சற்று வருத்தத்தைத் தந்துள்ளதாகக் கூறப்பட்டது. இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடந்தது.

இந்நிலையில் மதிமுகவிற்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் அதனுடன் சேர்ந்து ஒரு ராஜ்ய சபா தொகுதியைத் தருவதாக திமுக தரப்பில் கூறப்பட்டதாகத் தகவல் வெளியானது. உங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குகிறோம். நீங்கள் ராஜ்யசபா எம்.பி.யாக ஆக வேண்டும் உங்கள் சேவை நாடாளுமன்றத்துக்குத் தேவை என வைகோவிடம் திமுக தலைமை கூறியதாக தகவல் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த வைகோ திமுக தலைவருடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்படுவதாக உடன்பாட்டில் கையெழுத்தானது.

கையெழுத்திட்டப்பின் அண்ணா அறிவாலயத்தில் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலிலும், 21 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் இப்போது வந்தாலும், எப்போது வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற அர்ப்பணிப்போடு, முழு ஒத்துழைப்போடு செயல்படுவது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் மிகுந்த மன நிறைவும், மகிழ்ச்சியும் கொண்டு இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். நானும், திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம்”.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Related posts