சீனாவில் பாலிவுட் ரோபோட் ஆகும் ‘2.0’

ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியின் ‘2.0’ திரைப்படம் சீன நாட்டில் வெளியாகத் தயாராகி வருகிறது. சீனாவில் வெளியாவதை முன்னிட்டு படத்துக்கு ‘பாலிவுட் ரோபோட் 2.0: ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘2.0’ திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலைக் குவித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. படத்தின் இந்தி டப்பிங் பதிப்பு மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதித்தது.

இந்தியப் படங்களுக்கென சீனாவில் தனி மவுசு உருவாகி வருவதால் தொடர்ந்து பல இந்தியப் படங்கள் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது பீஜிங்கை சார்ந்த மிகப்பெரிய திரைப்பட விநியோக நிறுவனமான ஹெச்.ஒய் மீடியாவுடன் இணைந்து, லைகா நிறுவனம் ‘2.0’ படத்தை சீனாவில் கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில் வெளியிடுகிறது. இதில் மொத்தம் 47,000 திரைகளில் படம் 3டியில் வெளியாகிறது.

தற்போது சீன பதிப்புக்கு ‘பாலிவுட் ரோபோட் 2.0: ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டி ரோபோ கதாபாத்திரமும், ‘2.0’ கதாபாத்திரமும் இடம்பெறும் போஸ்டரையும் விநியோகஸ்தர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

‘தங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ படங்களைப் போல ‘2.0’வும் சீனாவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts