ஈழத்து அஜய் நடித்த ஒருவன் திரைக்கு வரப்போகிறது.. கமான் பாய்ஸ்..!!

நயன்தாரா சொன்னால்தான் நம்மாளுக்கு அறம்..! அவ்வையார் சொன்ன அறம் செய்ய விரும்பை அறம் இயக்குநர் படித்திருந்தால் அறம் என்ற பெயரை வைத்து நயன்தாராவை அதில் நடிக்க வைத்திருப்பாரா என்று புகழ் பெற்ற தமிழ் இயக்குநர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வருகிறது.

த்ரிஷா அம்மனா சூலாயுதத்துடன் வந்தால்தான் நம்மாள் பக்திப்படம் பார்க்க வருகிறான்.. இப்படியிருக்கிறது நமது நிலை..

அது மட்டுமா எத்தனை பேர் போராடி செத்தாலும் விளங்காத விடயம் நம்மாளுக்கு விஜய் வந்து ஆளப்போறான் தமிழன் என்று சொன்னால்தானே விளங்குகிறது.

எனவே விளங்கக்கூடிய முறையில் சொல்வது ஒரு வழி.. அந்த வழியில் விஜய் பாணியில் வருகிறது ஒரு படம் அதன் பெயர் ஒருவன்.

யாழ்ப்பாணத்தில் ஒரு விஜய் இருக்கிறார் இவருக்கு பெயர் அஜய் என்று கூறுகிறார்கள். இவரை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஒருவன்.

இந்தத் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்த பின்னர் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் பின்தள்ளிப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது.

ரியூப் தமிழ் தயாரிப்பில் வெளிவருவதாக இன்று செய்தி வெளிவந்துள்ளது.

இளம் நாயகனான அஜய் முதலில் திரைக்கு வரவேண்டும்.. அதை மக்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

இன்று இலங்கையில் படம் எடுத்தால் சந்தைப்படுத்துவது பெரும்பாடு என்று பனைமரக்காடு என்ற படத்தின் இயக்குநர் கேசவராஜன் சென்ற வாரம் கூறியிருந்தார். தனக்கு நோர்வே திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநர் விருது கிடைத்ததாகவும் கூறினார்.

அவ்வளவுதானா..? வெறும் வெற்றிக்கிண்ணங்களை வைத்து என்ன செய்வது..? முதலில் வெற்றிக்கிண்ணங்களுடன் பணமும் கொடுக்க வேண்டும், இல்லையேல் நீண்ட காலத்திற்கு அது பெறுமதியை காக்க முடியாதல்லவா..? பணம் வழங்காமல் அறுபத்தி நான்கு விருது பெற்று என்ன பயன்..? முதலில் விட்ட முதலை எடுக்க தொழிலை விருத்தி செய்ய வேண்டுமென ஒரு விருது பெற்றவர் கூறினார்.

மேலும் இங்கிலாந்து புதியவன் ராசையாவின் ஒற்றைப்பனை பல பரிசுகளை வென்றதாகவும் திரைக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

பார்க்க ஆவலாக உள்ளதாக பலர் கூறுகிறார்கள்.. நல்ல முறையில் தயாரித்திருப்பதாகவும் விமர்சகர் ஒருவர் கூறியிருக்கிறார்.

எது எப்படியோ அனைவரும் தொடர்ந்து திரைக்கு படங்களைக் கொண்டு வருவது அவசியம்.. சரி தவறு பேச வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அந்தளவுக்கு வளர நமது வர்த்தகம் போதியதல்ல.

அல்லாமலும் ஒரு படத்தை இலங்கையை தளமாக வைத்து தயாரித்தாலே அது சாதனைதான் அதை நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரிக்க வேண்டும்.

நமது படம், அட நம்மவர் படம், அது மட்டுமா அதோ பார் நமது ஈழப்படம் என்று குதிப்பவரில் நிறையப்பேர் டிக்கட் எடுத்து திரையரங்கு வருவதில்லை என்பதை புரிந்து அவர்களும் வாய்ச் சொல் விட்டு, தம் கடமைகளை இனியாவது செய்யும்படி தூண்ட வேண்டும்.

முதலில் நமது மக்களை ஆதரிப்போம் அப்போதுதான் அவர்கள் வளர முடியும். ஒருவன் வெற்றிபெற வாழ்த்து கூறுவோம்.

அலைகள் 04.03.2019

Related posts