திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடைக்கு எடை காணிக்கை

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதி திருமலை வெங்கடேஸ்வர பெருமாளை தரிசனம் செய்தார்.

இதுகுறித்து தேவஸ்தான உயரதிகாரிகள் பிடிஐக்கு தெரிவித்த விவரம்:

திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியா வந்த இலங்கை பிரமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பதிக்கு அருகிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார்.

அங்கிருந்து நேரடியாக திருமலைக்கு வந்தபோது அவருக்கும் அவரது மனைவி மைத்ரிக்கும் தேவஸ்தான அர்ச்சகர்கள் கோயிலின் பாரம்பரிய முறைகளில் வரவேற்பு அளித்தனர்.

வேண்டுதல்

இன்று காலை, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் ரணில், துலாபாரம் எனப்படும் சடங்கை நிறைவேற்றினார்.

ஏழுமலையானுக்கு வேண்டுதல் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, துலாபாரம் எனப்படும் சடங்கின் ஒரு பகுதியாக, ஆளுயர தராசின் ஒரு தட்டில் அமர்ந்து கொண்டார். அவரது எடைக்கு நிகராக தானியங்கள் அல்லது தங்கம், வெள்ளி அல்லது பணமாக ஏதாவது சிலவற்றை இன்னொரு தட்டில் வைக்கவேண்டும் என்பது ஐதீகம்.

அவ்வாறே தனது வேண்டுதலை நிறைவேற்றிய ரணில், அதனை காணிக்கையாகவும் செலுத்தினார். அதன் பின்னர் அவரும் அவரது மனைவி, மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் அனைவரும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

சிறப்பு ஆசீர்வாதம்

ரணில் திருப்பதி கோயிலில் ஒரு மணிநேரம் செலவிட்டார். தரிசனத்தின்போது அவருக்கு புனித பட்டுத்துண்டு அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. பிரசாதமும் சிறிய பாட்டிலில் புனித தீர்த்தமும் வழங்கப்பட்டது. ஆலயத்தில் உள்ள ரங்கமண்டபத்தில் மூத்த அர்ச்சகர்கள் வேதாகம மந்திரங்கள் முழங்க, ரணில் விக்கிரம சிங்கவுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்கினர்.

பின்னர் அவர் சென்னை வழியாக இலங்கை புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதிக்கு வருவது இது நான்காவது முறையாகும்.

Related posts