22 சீட்டுகளுக்காக அணு ஆயுதப் போர்ப் பதற்றம்

இதற்காக கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவின் பேச்சை பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் கானின் பிடிஐ கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.

முன்னதாக, பாலகோட் தாக்குதலால் மோடி அலை அபாரமாக வீசுவதாகவும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாகவும் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர், “ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களை மோடி அழித்துள்ளார். இது நாடு முழுவதும் மோடி ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும்.

இதனால், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று பேசியிருந்தார்”. ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் சூழலில் அதை நிரூபிப்பதுபோல் எடியூரப்பா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப்) கட்சி பாஜக அரசு மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பிடிஐ, ”அணுசக்தி ஆயுதங்களைக் கொண்ட இரண்டு நாடுகளை உச்சபட்ச பதற்ற நிலைக்கு இட்டுச் செல்வதன் பின்னால் அரசியல் விளையாட்டு இருக்கிறது. இது வெளியே தெரிய இரண்டு நாட்கள் ஆகியிருக்கிறது. இதற்கான காரணம் 22 சீட்டுகள் மட்டுமே.

இந்தக் காலகட்டத்தில், எந்தத் திட்டமும் ரகசியமாகவே இருக்க முடியாது. இந்தியர்களே குறித்துக்கொள்ளுங்கள்; போருக்கு நோ சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளது. அத்துடன் எடியூரப்பா பேசிய வீடியோவையும் இணைத்துள்ளது.

Related posts