ரஜினிக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். த்ரிஷா ரஜினியின் மனைவியாகவும், சிம்ரன் ரஜினி மேல் காதல் வயப்படுபவராகவும் நடித்தனர். சிம்ரன், த்ரிஷா இருவருமே ரஜினியுடன் இணைந்து நடித்த முதல் படம் இது.

பேட்ட’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று தகவல்கள் உலா வருகின்றன. இந்தப் படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘பேட்ட’ படத்துக்கு அனிருத் இசையமைத்தார். அதுதான் அவர் இசையமைத்த முதல் ரஜினி படம். ‘பேட்ட’ படத்தின் பாடல்கள் ஹிட்டான நிலையில், இந்தப் படத்துக்கும் அனிருத்தே இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, இருவரிடமும் தற்போது பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், இன்னும் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் பதில் கிடைத்தது. மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Related posts