மூன்று தலைமுறையாக இந்திய விமானப்படை சேவை

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுக்க சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

யார் இந்த அபிநந்தன்? விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநந்தன்?

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர்தான், அபிநந்தன் குடும்பத்தின் பூர்வீக கிராமம். அபிநந்தனின் பெற்றோர் தற்போது சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள விமானப்படை அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அபிநந்தனின் சகோதரி ஒருவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அபிநந்தனுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்திய விமானப்படையில் எப்போது சேர்ந்தார்?

விங் கமாண்டர் அபிநந்தன் கோவையிலுள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்திய விமானப்படையில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அபிநந்தன், 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். தற்போது, விங் கமாண்டர் பதவியை வகிக்கிறார். இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு இணையானது விங் கமாண்டர் பதவி. இவர் இயக்கியதாக சொல்லப்படும் மிக்21 பைசன் ரக விமானம் இந்திய விமானப்படையின் 3ஆம் அணியை சேர்ந்தது. இந்தப் பிரிவை கோப்ரா பிரிவு என்றும் அழைக்கிறார்கள்.

மனைவியும் விமான படை வீரர்

அபிநந்தனின் மனைவி தான்வி மர்வாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றிவர்தான். 2005 ஆம் ஆண்டு விமானப்படையில் பணியில் சேர்ந்தார். ஸ்குவாட்ரன் லீடராக இருந்து விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது, பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

மணி ரத்னம் படத்திற்கு உதவிய அபிநந்தனனின் தந்தை இந்திய விமானப்படையில் மிக மூத்த அதிகாரியாக இருந்தவர் சிம்மகுட்டி வர்தமான். 1974ல் இந்தியா விமானப்படையில் பணியில் சேர்ந்த அவர், 2012ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய பணிக் காலத்தில் மொத்தம் ஏழு பதவி உயர்வுகளைப் பெற்று ஏர் மார்ஷலாக ஓய்வு பெற்றார். 2017ல் வெளியான இயக்குநர் மணி ரத்னத்தின் காற்று வெளியிடை படத்திற்கு ஆலோசராக செயல்பட்டுள்ளார். அபிநந்தனின் தாய் ஷோபனா வர்தமான் சென்னையில் மருத்துவம் பயின்றவர். விங் கமாண்டர் அபிநந்தனின் தாத்தா இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்ததகாவும் கூறப்படுகிறது.

Related posts