நடிகை ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டு நிறைவு

நடிகை ஸ்ரீதேவி மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. தாயின் மறைவால் கனத்த இதயத்துடன் வசிப்பதாக அவரது மகள் நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

உறவினரின் திருமணத்துக்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் துபாய் சென்றிருந்தார் நடிகை ஸ்ரீதேவி. பிப்ரவரி 24-ம் தேதி ஸ்ரீதேவி ஓட்டல் அறையில் உள்ள குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்து கிடந்தார். இவரது அகால மரணம் நாடு முழுவதிலும் உள்ள ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி மறைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டாலும் அவரது வீட்டில் ஸ்ரீதேவி இறந்த சோகம் மறையவில்லை.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சோகத்துடன் காணப்படுகின்றனர்.

மூத்த மகள் ஜான்வி மீது அதிக பாசம் வைத்திருந்தார் ஸ்ரீதேவி. அவரது மறைவால் தான் இன்னும் கனத்த இதயத்துடன் வசிப்பதாக ஜான்வி கபூர் நேற்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாயுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஜான்வி.

தாய் இறந்த துக்கத்திலிருந்தும், அதிர்ச்சியிலிருந்தும் தன்னால் இன்னும் மீளமுடியவில்லை என்றும் ஜான்வி குறிப்பிட்டுள்ளார். அந்த வலி இன்னும் தன்னைத் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: உங்களது மறைவால் எனது இதயம் எப்போதும் கனத்து காணப்படும். ஆனாலும் நான் எப்போதும் புன்னகையுடன் காணப்படுவேன். ஏனென்றால் அந்த இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்” என்று தாயின் மறைவை குறிப்பிட்டுள்ளார் ஜான்வி.

நடிகை ஜான்வி கபூர் நடித்த முதல் இந்தி திரைப்படம் தடக் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related posts