பெண்களை அதிகம் பாதிக்கும் அல்ஸைமர்

ஞாபகமறதி என்பது இயல்பானது. என்றாலும் வழமைக்கு மாறாக ஏற்படுகின்ற ஞாபக மறதியே எல்லோராலும் அறியப்படுகின்ற அல்ஸைமர் நோயாக விளங்குகின்றது. இது நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியதாகும். உலகில் இந்நோயால் ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் ஆண்களைவிட பெண்களைத் தான் அதிகம் பாதிக்கின்றது. இதனை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

பொதுவாக பெண்களைப் பாதிக்கும் சில நோய்கள் உண்டு. அவற்றில் அல்ஸைமர் நோய் அவர்களை அதிகம் பாதிக்கக்கூடியதாக உள்ளது. இந்த அல்ஸைமர் நோயில் வயது முக்கியப் பாத்திரம் வகிக்கின்றது. இதனால் வயது அதிகரிக்க அதிகரிக்க இந்நோய்ப் பாதிப்புக்கான வாய்ப்புகளும் கூடிச் செல்கின்றன. அதாவது ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் எனக் கருத முடியாது. அது தவறானது என அண்மைக்கால ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை பெண்கள் மத்தியில் காணப்படும் மன அழுத்தப் பிரச்சினையும் அல்ஸைமர் நோய்க்கு வழி வகுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக ரீதியான பொறுப்புகளும், காரணிகளும் கூட இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.

பெற்றோரையும், குழந்தைகளையும், கணவரையும் பாரமரிக்கும் பொறுப்புகளும் கூட பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதாக ஆரோக்கிய உடற்கூற்றியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பெண்களின் மூளை தொடர்பில் ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள உள ரீதியான வேறுபாடுகளும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்குவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு தான் அல்ஸைமர் ஏற்படுவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இப்புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவாற்றல் திறன் அதிகளவில் குறைந்திருப்பதும் அவதானிக்கப்படுள்ளது. என்றாலும் ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் குறித்து ஆராய வேண்டிய தேவை மருத்துவ உலகில் உள்ளது.

ஆகவே வழமைக்கு மாறான ஞாபக மறதிக்கு முகம் கொடுத்திருப்பவர்கள் தொடர்பில் துறைசார் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்படுவதே சிறந்தது.

Related posts