13 வருட கட்டாயக் கல்வி பிரகடனம்

நாட்டின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் தூரநோக்குடனேயே அரசாங்கம் 13 வருட கட்டாயக் கல்வியை பிரகடனப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மனித வளத்தை மேம்படுத்துவதனூடாக உலகத்துடன் போட்டியிடக்கூடிய வல்லமையை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

நவீன கல்வி புரட்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இந்த வைபவம் இடம்பெற்றது. பிரதமர் இங்கு தொடர்ந்து பேசுகையில்:-

21ஆம் நூற்றாண்டின் கல்வித் தேவைகள் துரிதமாக மாற்றமடைந்து நவீனமடைந்து வருகின்றன. இந்த உலகளாவிய மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடியதான நவீன எதிரகால பிரஜைகளை உருவாக்குவது இன்று கல்வித்துறை எதிர்நோக்கும் பெரும் சவாலாகும். பாடசாலைகளில் சேரும் பிள்ளைகளுக்கு சரியான கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு சரியான கல்வி முறையொன்று அவசியமானதாகும்.

நாட்டின் சம்பிரதாய வகுப்பறைக் கல்வி மூலம் எமது இலக்கை உரிய முறையில் எட்டமுடியாது அதிலிருந்து விடுபட்டு விரிவான பாடங்களை உள்ளடக்கியதான திறமைகளை மேம்படுத்தக்கூடிய இலக்கை கொண்ட கல்வி முறையொன்றே இன்றைய தேவைப்படாக உள்ளது. நாளைய உலகை வெற்றிகொள்ளக்கூடிய விதத்திலேயே 13 வருட கட்டாயக்கல்வியை சகல பிள்ளைகளுக்கும் உறுதிப்படுத்தியுள்ளோம். எம்மிடமுள்ள இலவசக் கல்வியை உலகளாவிய திருப்புமுனைக்கு கொண்டு செல்வதே எமது இலக்காகும்.

ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் 13 வருடகால பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவதன் மூலம் நவீன பொருளாதாரத்துக்கு பொருத்தமுடையதாக மாற்றி தொழில், வருமானம் இரண்டிலும் தன்னிறைவைக் காணமுடியும்.

நாம் இலவசக் கல்வி குறித்துப் பேசுகின்றோம். சாதாரண தரம்வரை இலவசக் கல்வியை எப்படியாவது பாதுகாத்துக்கொள்கின்றோம். அதன்பின்னர் உயர் கல்வியை நோக்கிச் செல்பவர்களது தொகை 50 அல்லது 55 வீதமானவர்கள் மட்டுமே ஆகும். கிராமப்புறங்களில சிலர் 8ம் தரத்தோடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். சிலர் சாதாரணதரத்துடன் விலகிக்கொள்கின்றனர். உயர் தரம் வரை படித்து பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுக்கொள்பவர்கள் 5 சதவீதமானவர்களே. மீதமுள்ளவர்களில் 10 -15 சதவீதத்தினர் வேறு துறைகளில் உயர் கல்வியை நாடிச் செல்கின்றனர்.

இதன் மூலம் எமது மனித வளம் வீணாகிவிடுகின்றது. எமது கடந்த கால கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டது வெள்ளையர்கள் காலத்திலாகும் அவர்கள் பல்கலைக்கழகம் வரை மட்டுப்படுத்தியே அதனைச் செய்தனர். இன்று உலகின் முன்னேற்றமடைந்த நாடுகளின் கல்வித்திட்டமானது சமூகத்துக்கு பொருத்தமான விதத்தில் மக்களைப் பயிற்றுவித்தலுக்கான சாதனமாக கையாளப்படுகின்றது.

எம்மால் இலவசக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் சி.டபிள்யு.டப்ளியு. கன்னங்கர அறிமுகப்படுத்திய கல்வித் திட்டம் பற்றியே நாம் பேசுகின்றோம். இலங்கையில் 1940 களிலேயே இலவசக் கல்வி ஆரம்பமானது. அன்று எமது கல்வித் தரம் உயர்வாகவே காணப்பட்டது. இன்று கொரியா, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகள் 13 வருட கட்டாயக் கல்வித் திட்டத்தால் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இன்று நாமும் 13 வருடக் கல்வி என்ற கல்விப் புரட்சியை தொடங்கியுள்ளோம்.

எமக்கு தொழில்நுட்பக்கல்வியில் சிறந்த பட்டதாரிகள் மூன்று இலட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இருப்பதோ ஒரு இலட்சம் பேரளவினரேயாவர். முதற் கட்டமாக 13 வருடக் கட்டாயக் கல்விக்கு 800 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்படும். காலப்போக்கில் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் 13 வருட கட்டாயக் கல்வி பிரகடனப்படுத்தப்படும். நாளைய சந்ததியினர்கள் கல்வியில் சிறந்தவர்களாக, உலகை வெல்லக்கூடியவர்களாக மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். இதனை அரசாங்கம் தேசிய திட்டமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதில் அரசியல் நுழைய ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Related posts