விஜயகாந்த் நல்ல மனிதர் ரஜினிகாந்த் பேட்டி

அரசியல் குறித்து துளியும் பேசவில்லை என, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த பிறகு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளில் எந்தக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இருக்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ள ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்ததாக முன்னதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

விஜயகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைப் பார்க்க வந்த முதல் நபர் விஜயகாந்த் தான். சிங்கப்பூரிலிருந்து வந்த பிறகும் தொலைபேசியில் என் உடல் நிலையை விசாரித்தவரும் அவர் தான். அவர் இப்போது அமெரிக்கா சென்றுவிட்டு நல்ல ஆரோக்கியத்துடன் வந்திருக்கிறார். பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. நல்ல மனிதர். அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை” என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் கூட்டணி குறித்து பேசப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் என் அரசியல் நிலை குறித்து ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அதனால், அங்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்றார் ரஜினிகாந்த்.

ஏற்கெனவே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வியாழக்கிழமை விஜயகாந்தை நேரில் சந்தித்தார். கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்குமாறு விஜயகாந்திடம் கூறியதாக திருநாவுக்கரசர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts