தகுதியும், தரமும் நிறைந்த டுலெட் ?

வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே ‘டுலெட்’.

சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார்.

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல் என்ன, வீடு தேடுவதில் உள்ள சிரமங்கள் என்ன, வீடு என்பதற்கான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந்த மூவரும் என்ன செய்கிறார்கள், எங்கே அவர்களுக்கு வீடு கிடைத்தது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

ஓர் இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அலைய வைக்கிறது என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு அதற்கு அழகான திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செழியன். மேலும், வழக்கமான விருது சினிமாக்களுக்குரிய வரையறைகளையும் உடைத்து எறிந்திருக்கிறார். பாடல்கள் இல்லை, பின்னணி இசை இல்லை. நல்ல கதைக்கு அது தேவையும் இல்லை என்பதை செழியன் காட்சிகள் மூலம் தெளிவுபடுத்திவிடுகிறார்.

நடுத்தரக் குடும்பத்தின் ஏக்கத்தை, தவிப்பை, அவமானத்தை, இயலாமையை, மகிழ்ச்சியை, தொந்தரவை, சங்கடத்தை அப்படியே நடிப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஷீலா. பிரச்சினைகளின் போது கண்ணீர் விட்டு மன்றாடும்போதும், சொந்த வீடு குறித்து கண்களில் தேக்கி வைத்திருக்கும் கனவை வார்த்தைகளால் கணவனிடம் சொல்லும்போதும், வாடகை வீடு கிடைக்காத அவஸ்தையிலும் குறைந்த விலையில் வீடு என்பதால் சொந்த வீட்டுக்கான விளம்பரத்துக்கு போன் நம்பரைக் கொடுத்ததாக வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லும்போதும் வீடு குறித்த தன் அர்த்தமுள்ள ஆசையை வெளிப்படுத்துகிறார். குழந்தையைக் கொஞ்சும் அந்தப் புன்னகை மொழியில் இயல்பாக ஈர்க்கிறார்.

பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னை நிரூபிக்கப் போராடும் உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் சந்தோஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். மனைவியிடம் கோபமுகம் காட்டி கன்னத்தில் அறைந்த மறு நொடியில் மன்னிப்பு கேட்கும் சந்தோஷ், அவரைச் சிரிக்க வைக்கவும் நெகிழ வைக்கவும் எடுக்கும் முயற்சிகள், நீ யார் கிட்டயும் கெஞ்சுறது எனக்குப் பிடிக்காது என்று மனைவியிடம் சொல்லும் தருணங்கள் நல்ல குடும்பத் தலைவனுக்கான அடையாளம்.

தமிழ் சினிமாவில் குழந்தைகளை அவர்களின் குழந்தைத்தன்மையோடு பதிவு செய்வது அரிது. தருண் கதாபாத்திரத்தின் மூலம் அந்த அரிதான பதிவை செழியன் சாத்தியப்படுத்தியுள்ளார். விளையாட்டு, ஓவியம், பெற்றோர் மீதான அன்பு, புது வாடகை வீடு குறித்த தன் மகிழ்ச்சி என எல்லாவற்றிலும் செயற்கைத்தனம் கலக்காத தருண் ஆச்சர்யப்படுத்துகிறார். தன் விளையாட்டில் 100 ரூபாய்க்கு வாடகை வீடு தருவதாகச் சொல்வது, அப்பாவிடம் கசக்கி எறியப்பட்ட ஓவியத்துக்கு இஸ்திரி போடச் சொல்வது என படம் முழுக்க வசீகரிக்கிறார். இந்த டிவி நம்மளோடது, வண்டி நம்மளோடது, ஆனா இந்த வீடு மட்டும் ஏன் நம்மளோடது இல்லை என்று தருண் கேட்கும் ஒற்றைக் கேள்வி நம்மையும் சேர்த்தே உலுக்குகிறது.

கண்டிப்பான ஹவுஸ் ஓனராக வரும் ஆதிரா பாண்டியலட்சுமி, எதிலும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் ஆதிராவின் கணவர் கவிஞர் ரவி சுப்பிரமணியன், விளம்பரப் பட இயக்குநராக வரும் மணி எம்கே மணி ஆகியோர் பொருத்தமான வார்ப்புகள். வாடகை மூவாயிரம், கரண்ட் பில் 30 ஆயிரம் கட்டணும் போல, குகைக்குள்ளே கூட்டிட்டுப் போற, அவரும் நீங்களும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு… ஒரே மணவாடு என்று சொல்லி சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தும் அருள் எழிலன் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.

”கதைக்குள்ள இருக்குற மனுஷங்களுக்கு காட்டுற அக்கறையை பக்கத்துல இருக்கிற மனுஷங்ககிட்டயும் காட்டணும்”, ”குற்ற உணர்வும் மன அழுத்தமும்தான் கலைஞனுக்கு உரிய ரா மெட்டீரியல்” போன்ற இயல்பான அளவான வசனங்கள் படத்துக்கு அழகு சேர்க்கின்றன.

நெரிசல் மிக்க சென்னையின் சத்தங்களையும் பம்பை, மேளம், கடல் அலை, போக்குவரத்தின் ஓசைகளையும் தபஸ் நாயக் சவுண்ட் டிசைனில் செதுக்கி இருக்கிறார். எடிட்டிங் நேர்த்தியில் ஸ்ரீகர் பிரசாத் மலைக்க வைக்கிறார். நிழல், இருட்டின் அடர்த்தி, ஒளியின் தன்மைக்கேற்றவாறு செழியனின் கேமரா லாவகமாகப் பயணிக்கிறது.

ஐடி துறைக்குப் பிறகு வாடகை வீடுகளுக்கான மவுசு எப்படி? யாரால்? அதிகரித்தது என்பதையும் படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

வாடகைக்கு வீடு தேடும் அலைச்சல், வலி, துயரத்தைப் பாசாங்கு இல்லாமல் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அழுது வடியும் காட்சிகள், எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற சுய புலம்பல், உலகத்தின் வலிமிக்க மனிதன் நானே என்ற பிரச்சாரம் போன்றவை படத்தில் இல்லாதது வரவேற்கத்தக்கது. அதே சமயம் போரடிக்கும் காட்சிகள், நிதானகதியில் செல்லும் திரைக்கதை போன்ற வழக்கமான குறைகளாகச் சொல்லப்படும் அம்சங்களும் இல்லை.

படத்தின் யதார்த்தமான அணுகுமுறையும், அது பேசும் உண்மையும், நேர்மையும் நம்மை படத்துக்குள் அழைத்துச் செல்கிறது. நாயகன் – நாயகி- வில்லன் என்ற ஃபார்முலாக்களும் இல்லாதது படத்தின் ஆகச் சிறந்த பலம். எந்த ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமும் படத்தில் கட்டமைக்கப்படாதது ஆரோக்கியமானது. அந்த வகையில் தமிழில் தகுதியும், தரமும் நிறைந்த ஒப்புயர்வற்ற சினிமாவாக ‘டுலெட்’ தனித்து நிற்கிறது.

Related posts