சவுதி இளவரசரை விமான நிலையத்துக்கே சென்று அழைத்த மோடி

இந்தியா வந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை, அரசு நடைமுறைகளை ஒதுக்கி வைத்து விட்டு, பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு சென்று வரவேற்று அழைத்து வந்தார்.

புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மூன்று நாள் தாமதமாக சவுதி இளவரசர் பின் சல்மான் பாகிஸ்தான் சென்றார். சவுதி இளவரசர் சல்மானை பாகிஸ்தான் நாட்டில் வழக்கமாக பின்பற்றப்படும் அரசு நடைமுறைகளை புறந்தள்ளி விட்டு விமான நிலையத்தில் இருந்து தனது காரில் அழைத்து வந்தார் பிரதமர் இம்ரான் கான். காரை இம்ரான் கானே ஓட்டி வந்தார்.

இதைத்தொடர்ந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா கையெழுத்திட்டது.

இந்தநிலையில் சவுதி இளவரசர் பின் சல்மான் நேற்று இரவு இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்துக்கே சென்று பிரதமர் மோடி, சவுதி இளவரசரை வரவேற்றார். இந்தியாவிலும் அரசு நடைமுறைகளை ஒதுக்கி வைத்து பிரதமர் மோடி விமான நிலையம் சென்று சவுதி இளவரசரை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் ‘‘இந்தியா – சவுதி இடையே புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. அரசு நடைமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பிரதமர் மோடி, நேரடியாக விமான நிலையம் சென்று சவுதி இளவரசரை வரவேற்றுள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சல்மானுக்கு இன்று அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, சவுதி இளவரசர் சல்மான் சந்தித்து பேசினார்.

Related posts