ரியூனியன் தீவிலிருந்து 70 இலங்கையர் இன்று நாடு கடத்தல்

வள்ளத்தின் மூலம் சட்டவிரோதமாக ரீயூனியன் தீவை சென்றடைந்த 72 இலங்கையருள் 70 பேர் இன்று (14) விசேட விமானம் மூலம் நாடு திரும்புகின்றனர்.

இந்தப் படகில் பயணித்த இருவர் மட்டும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பி அனுப்பப்படுபவர்களுள் 52 தமிழர்களும், 18 சிங்களவர்களும் அடங்குவதுடன் ஆழ்கடல் வள்ளத்தில் பயணித்த மாலுமிகளும் அடங்குவதாக கடற்றொழில் திணைக்களத்தில் செயற்பாட்டுப் பணிப்பாளர் கல்யாணி ஹேவா பத்திரன தெரிவித்தார்.

இவர்கள் 70 பேரும் இன்று திருப்பி அனுப்பப்படுவதாக வெளிவிவகார அமைச்சு கடற்றொழில் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவர்கள் இலங்கை வந்தடைந்ததும் பொலிஸார் இவர்களை கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜே. பிரசன்சா என்ற ஆழ்கடல் வள்ளம் கடந்த ஜனவரி 9 ஆம் திகதியளவில் 72 பேருடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தப் படகு ரீயூனியன் தீவை சென்றடைந்ததாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 நாட்கள் கடலில் பயணித்தே ரீயூனியன் தீவை படகு சென்றடைந்துள்ளது.

சிலாபத்தைச் சேர்ந்த சுதர்ஷன் பெரேரா என்ற மீனவருக்குச் சொந்தமான இந்த ஆழ்கடல் வள்ளத்தில் மஹவெவ, தொடுவாவ பகுதியைச் சேர்ந்த சீ. கே. பர்னாந்து என்பவரே படகை செலுத்திச் சென்றுள்ளார்.

ஆட்கடத்தல் விவகாரத்தில் வள்ளத்தை செலுத்தியவரும், ஏனையவர்களும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக படகு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது மகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு கடற்றொழில் விடயத்தில் ஈடுபட முடியாமல் போனதால் இதனை சாதகமாக பயன்படுத்தியவர்கள் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே தனது படகை ரீயூனியன் தீவிலிருந்து பெற்றுத்தருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் படகு தொடர்பாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கையில், இதுபோன்ற படகுகள் இன்னமும் ரீயூனியன் தீவில் இருப்பதாகவும் இவற்றை இலங்கைக்கு எடுத்துவர இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts