வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்திய குளிர்கால ஒன்றுகூடல் 2019

கடந்த 09.02.2019 சனிக்கிழமை மாலை டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள டுவகூஸ் கலாச்சார மண்டபத்தில் வல்வை ஒன்றியம் டென்மார்க்கின் குளிர்கால ஒன்று கூடல் ஆரம்பித்தது.

ஓரே ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரிந்து வாழ்வதால் வல்வை மக்களை வருடத்தில் இரண்டு தடவைகள் கோடைகால ஒன்றுகூடல் குளிர்கால ஒன்றுகூடல் என்று இணைத்து வைக்கிறது வல்வை ஒன்றியம்.

இதில் கூட பலரை இணைக்க முடிவதில்லை.. பரபரப்பு வாழ்வு, நேரமின்மை போன்ற பல காரணிகளால் வருடத்தில் இரண்டு தடவைகள் கூட நலம் விசாரிக்க முடியாமல் போகிறது வாழ்வு.

இதனால் என்ன பயன்..?

நாம் புலம் பெயர் வாழ்வு சூழலுக்கு அமைவாக உடல் உளரீதியாக, வாழ்க்கை ரீதியாக, பிள்ளைகளின் நிலை தொடர்பாக அடைந்திருக்கும் மாற்றங்களை அறிய முடிகிறது.

பரீட்சையில் சித்தியடைந்து தொழில்களுக்கு சென்ற மூன்று இளையோர் பாராட்டப்பட்டனர்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு எப்படியிருந்தோம் இப்போது எப்படியிருக்கிறோம் என்பதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்க, இத்தகைய ஒன்றுகூடல் உதவுகிறது.

நாம் இனி புதிய மாற்றங்கள் செய்து, தமிழ் மக்கள் அனைவருமே மற்றவரின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நிற்காமல் தோள் கொடுக்க வேண்டியதே நமது புதிய தேசிய கொள்கை என்று வகுக்க வேண்டும் அதற்கு இத்தகைய ஒன்றுகூடல் அவசியம்.

இதை வைத்து நமது நாட்டுக்கு என்ன செய்ய முடியும்..?

இந்த ஆண்;டு வல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கு ஒரு ஸ்மாட் வகுப்பறையை அமைக்க வேண்டும். அதற்காக மகளிர் அதிபர் கேட்ட பணத்தைவிட இரண்டு மடங்குக்கும் மேலாக வல்வை ஒன்றியம் டென்மார்க் நேற்று முன்தினம் பண உதவி வழங்கியது. இதை பாடசாலை அதிபர் தொலைபேசி வழியாக பாராட்டியதை மண்டபத்தில் இருந்து கேட்க முடிந்தது.

இத்தகைய நிகழ்வுகள் உளவியல்ரீதியாக மக்களுக்கு ஆறுதல் தருகின்றன. உறவு என்று ஒற்றுமைப்படுத்த முடியாது, ஊர் என்று ஒற்றுமைப்படுத்த முடியாது, இனம் என்று ஒற்றுமைப்படுத்த முடியாதென பேசியபடி கூறுகூறாக பிரிந்து செல்ல முடியாது.

நாம் ஓரிடத்தில் நிற்க வேண்டும். புலம் பெயர் வாழ்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தான் கிறீஸ்தவன் என்று காட்ட எருசெலேத்தில் கொடியேற்ற போகிறான் அமெரிக்கன்..

யாழ்ப்பாணத்தில் பௌத்த மாநாடு நடத்தினால்தான் பௌத்தம் விடியுமென நினைக்கிறது சிறீலங்கா அரசு.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டினாலே இந்து சமயம் விடியும் என்கிறது பா.ஜ.க கட்சியின் கடும்போக்கு பிரிவு.

ஆனால் நாம் மட்டும் பிறந்த ஊரைக்கூட நினைக்கக் கூடாது என்று கருதுகிறோமே இது சரியா..?

அப்படி கருதி இதுவரை நாம் கண்ட மிச்சம் என்ன..?

நம்மை நாமே வேர் அறுந்த மக்களாக்கி சர்பத்தில் கரைத்த ஜெலி போல மேலைக் கலாச்சாரத்தில் கரைத்து அழிக்கலாமா..?

என்று உதாரணங்களுடன் சிந்தித்தால்..

இதன் அவசியம் புரியும்..

இந்த விழா நள்ளிரவு 12.00 மணிவரை சிறப்போடு நடைபெற்றது. புதிய நிர்வாகம் தேர்வாகியிருக்கிறது. இனி கோடை கால ஒன்றுகூடல் நடக்க இருக்கிறது.

அலைகள் 11.02.2019 திங்கள்

Related posts