வாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 05 (10.02.2019)

மன அழுத்தம் ( Stress) ஒரு சின்ன விடயமல்ல அது சுகயீனம்

பொதுவாக “ஸ்ரெஸ்” என்ற ஒரு சொல் ஐரோப்பிய மொழிகளில் அதிகம் பேசப்படுகிறது. இந்த சொல்லுக்கு சரியான தமிழ் சொல் என்ன.. “மன அழுத்தம்” என்று கூறுகிறோம். ஆனால் ஐரோப்பிய மொழிகளில் ஸ்ரெஸ் என்ற சொல்லுக்குள்ள வலுவும், வரலாறும், கனதியும் நம் தமிழ் சொல்லில் உள்ள மன அழுத்தத்தைவிட மிக மிக சீரியஸ் ஆனது.

ஐரோப்பாவின் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அனிற்றா கோல்ட்மான் மன அழுத்தம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

” நாம் ஸ்ரெஸ் என்ற விடயத்தை நீண்ட காலத்திற்கு ஓர் எச்சரிக்கை போல பார்த்துவிட்டு, அப்படியே வாழ்ந்துவிட முடியாது. ஏனென்றால் இது சாதாரணமாக வந்து மறையும் எச்சரிக்கையல்ல.. ஓர் ஆபத்தான நோயாகும்.”

நாம் கட்டிய சமுதாயப் பொறிக்கிடங்கில் இப்போது நாமே சிக்குண்டுவிட்டோம் இதுவே நமது பரிதாப நிலை.

” ஒரு காலத்தில் நாங்கள் இந்தச் சமுதாயத்தை நம் தேவைகளுக்காக கட்டியமைத்தோம். இப்போது காலத்தின் மாற்றம் காரணமாக நாம் கட்டிய நமது சமுதாயத்திற்குள்ளே வாழ முடியாது தவிக்கிறோம். ”

” இது நமக்கு மட்டுமா இல்லை. பிள்ளைகள் பரமரிப்பு நிலையம் போகும் குழந்தைகள் தொடங்கி, ஓய்வூதியம் பெற்று தனிமையில் இருக்கும் முதியவர் வரை நமது சமுதாயப் பொறிக்கிடங்கில் மாட்டிவிட்டார்கள். மீண்டு வெளியே வர முடியவில்லை.”

” அந்தக் கடுமையான பஞ்சாங்கத்தனமான வாழ்க்கை முறையை ( யாரோ கட்டியமைத்த முறையால் ) ஒரு கட்டத்தில் மன முறிவடைந்தும் போகிறார்கள். இது சகல இடங்களிலும் வியாபகம் பெற்றுள்ளது. இந்த நெருக்குவாரங்கள் நாம் வாழும் சமுதாயத்தில், வேலையிடத்தில், பிள்ளைகள் பராமரிப்பு இல்லங்கள் என்று சகல இடங்களிலும் காணப்படுகிறது. காலத்திற்கு ஏற்ற மாற்றம் வரவேண்டும். நமது வழியை தடுக்கும் இந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.”

” நாமே நமது காலுக்கு விலங்கு போட்டுக் கொண்ட இந்தப் பிரச்சனை சாதாரணமானதல்ல நாம் நினைத்ததைவிட பயங்கரமானதாக இருக்கிறது. நாங்களே கட்டியமைத்த இந்த வாழ்க்கை முறையை இன்று நாங்களே பராமரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் ” என்று கூறுகிறார்.

” இதை தாண்ட வேண்டும் என்று எமக்கு தெரியும், ஆனால் தாண்டப் பயந்து காலகாலமாக அந்த சிலுவைகளை சுமந்தபடியே நடக்கிறோம்.”

ஸ்ரெஸ் உருவாவதற்கு பிரதான காரணம் இதற்குள்ளேயே ஒழிந்திருக்கிறது.

” நாளொன்று போவதற்கு நான் படும் பாடதனை
தாளம் படுமோ தறிபடுமோ யார் படுவார்..?”

என்று தமிழில் இதை பாரதி பாடியுள்ளார். அவரும் இதே துன்பங்களை அனுபவித்து பின்னர் பாடினார்..

” சிட்டுக்குருவியை போல விட்டு
விடுதலை பெறுவாய் என்று..”

அனிற்றா கோல்ட்மான் கூறியதும் பாரதி கூறியதும் ஒன்றுதான்.

ஸ்ரெஸ் (strees)என்பது ஒரு நோய்.. அது ஒரு சம்பவமல்ல..!

ஸ்ரெஸ் என்ற மக்கள் சுகயீனம் யார் என்ற பேதமின்றி எல்லோரையுமே பாதிக்கும் தன்மை கொண்டது. அதற்கு ஏழை, பணக்காரன், இளைஞன் அல்லது முதியவன், ஆண், பெண், வேலையுள்ளவன், வேலையற்றவன் என்ற பேதம் எதுவுமே கிடையாது.

நாம் ஒரு நிலையான மாற்றமற்ற, கணிதச் சூத்திரங்கள் போன்ற ஒரு சூத்திரத்தை வடிவமைத்துக் கொண்டு, அதற்குள் நம்மை பிணைத்துக் கொண்டு வாழ்கிறோம். இந்தப் பொறிக்குள் நாம் சிக்குப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து கொண்டு எப்போது விழிக்கப் போகிறோம்..?

தெரியாது..!

அதை நினைக்கவே பயப்படுகிறோம்..!

வேறு வழி தெரியாத நிலையில் இந்த கட்டுப்பாடுகளுக்குள்ளேயே வாழ்ந்து வெற்றி பெற முடியுமாவென நாம் போராடுகிறோம். அதனால் உறங்கக் கூட நேரமின்றி அலைகிறோம். இதனால் நாளுக்கு நாள் நாம் உறங்காமல் விழித்திருக்கும் நேரமும் அதிகரித்து செல்கிறது. உறக்கத்தை குறைத்து ஓய்வையும் குறைப்பதால் நாம் காணும் மிச்சம் என்ன..?

கானல் நீரைத்தேடி ஓடிய மான் போல ஓடுகிறோம்.. களைப்படைந்து வழியில் வீழ்கிறோம்.!

சிலந்தி வலைபோல பின்னப்பட்ட நம் வாழ்வியல் முறையில் வெற்றி காண நம் இயல்பான நடத்தையை மாற்றுகிறோம். ஆனால் அது முடிகிற காரியமா..? நாம் எப்படி மாறினாலும் நம்மோடு சேர்ந்து நம் மூளையும் மாறிவிடும் என்று கூற முடியாது. ஏனென்றால் மூளைக்கு அப்படியொரு தேவையில்லை.

எனவேதான் இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும். மேலும் நமது வாழ்வை செக்கு மாடுபோல,”படுப்பதும் எழுவதுமாக” ஒரே அச்சில் சுழற்றிவிடக் கூடாது. மாற்றமும், விடிவும் வேண்டுமானால் முதலில் கடந்த காலத்தையும் அதன் நகர்வையும் நாம் அறிய வேண்டும்.

மேலும் அடிப்படை விடயங்களில் மனித குலம் அடைந்த வளர்ச்சிகளை நாம் தேடி அறிய வேண்டும். நமது உடலானது அந்த வரலாற்று இயங்கியலோடு எப்படி சோந்தியங்குகிறது என்பதையும் அவதானிக்க வேண்டும்.

நாம் கண்டு பிடித்த அடிப்படை விடயங்கள் மனித குலத்தை எப்படி இயங்க வைத்தன என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதை மனித உடம்பு எப்படி புரிந்து கொண்டதென கண்டு பிடித்து, அதற்கமைய நம் உடலை நாமே இயக்க வேண்டும். அதில் மாற்றம் செய்யலாகாது.

இன்றைய உலகம் மிகவும் மோசமானது.. சமூக வலைத்தள விஞ்ஞான உலகம். நம்மால் அறிய முடியாதளவுக்கு புதுமைகள் குவிகின்றன.

எமது மூளை இன்றைய தகவல் உலகத்தின் அழுத்தங்களுக்கு ஏற்ப இயங்குவதற்காக படைக்கப்படவில்லை. இன்றைய அளவுகடந்த நவீனத்தால் அது பாதிக்கப்படும் என்பதை நாம் அலட்டிக்கொள்ளாமல் புரிய வேண்டும்.

நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. அதை அனுபவிக்க வேண்டும், அமைதியாக வாழ வேண்டும் என்று அனிற்றா கோல்ட்மான் கூறுகிறார்.

எப்போதுமே எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒரு சமநிலை இருக்கிறது. அந்தச் சமநிலை குலைவடையும்போது விரைவாக ஸ்ரெஸ் ஏற்படும். அது வரும்போது உயிரணுக்களால் படைக்கப்பட்ட உடல் சமிக்ஞை தரும் அதை நாம்தான் கண்டறிய வேண்டும்.

சிலந்தி வலையில் ஒரு சிறிய அதிர்வு ஏற்பட்டாலும் சிலந்தி அந்த இடத்திற்கு வந்துவிடுகிறதே ஏன்..? அதிர்வுகளுக்கு முதல் மதிப்பு கொடுக்க வேண்டும்.

ஸ்ரெஸ் என்றால் என்ன..?

இதற்கு எளிமையான விளக்கம் ” உடலில் உள்ள அட்றனலின் (Adrenalin), கோற்றிசூல் (Kortisol) ஆகிய தன்னம்பிக்கை தரும் இரு முக்கிய கோமோன்கள் பாதிக்கப்படுதாகும் “என்று மருத்துவ உலக விளக்கம் கூறுகிறது. அட்றனலின் என்றால் நமது உடலில் உள்ள ஒரு கோமோனின் பெயராகும். இது நமக்கு ஸ்ரெஸ் வராது தடுக்கும் கோமோனாகும்.

அதுபோல கோற்றிசூல் என்றால் குளுக்கோஸ் உள்ள ஒரு கோமோனாகும். இதுவும் நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் கோமோனே. விளையாட்டு போட்டியில் குளுக்கோசை சாப்பிட்டுவிட்டு வேகமாகவும், வெற்றி கிடைக்கும் என்றும் ஓடுகிறோமே அப்படி..

இந்த இரண்டு கோமோன்களும் உண்மையில் நேர்மறை கோமோன்களாகும்.

ஆனால் இவை எதிர்மறையாக செயற்படும் நிலை ஏற்பட்டால், பிரதிபலனாக ஸ்ரெஸ் ஏற்படும். இவ்விரு கோமோன்களும் பாதிக்கப்படுமானால் மனித உடல் இயக்கம் முன்னதாகவே சீரழியும். அந்த சீரழிவில் இருந்து வெளியே வருவதென்றால் அது சாதாரண விடயமல்ல அது ஒரு வாழ்க்கைப் போராட்டமாகும்.

ஸ்ரெஸ் என்ற நோய் எப்படிப்பட்டது ?

அது பல படிகளை கொண்டது.. ஆரம்பம் இடைநிலை.. முற்றிய நிலை என்று பல தளங்களில் விரிவடைகிறது.

ஸ்ரெஸ் தரம் ஒன்று

உடம்பில் உள்ள அட்றனலின் கோற்றிசூல் கோமோன் இரண்டும் சூழ்நிலையால் எதிர்ப்பக்கமாக செயற்பட என்ன நடக்கும்..?

இயல்பாகவே இரத்த அழுத்தம் கூடும், அவை சர்க்கரை அளவையும் கூட்டும். எனவே திடீரென உடம்பை சமநிலைப்படுத்த போராட வேண்டிய தேவை ஏற்படும்.

பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் ஒரு பக்க சிறகில் திடீரென பாரம் கூடினால் என்னவாகும்..? விமானம் பறக்க முடியாது சமநிலை குலையும். இதுதான் நமது உடலிலும் நடக்கும்.

ஆனால் இது முதலாவது படி என்பதால் நம்மை சமப்படுத்த இன்னொரு கோமோன் செயற்படும். இதை ஒக்ஸரொக்கின் (oxytocin)என்பார்கள். இதற்கு ” காதல் கோமோன் ” என்றும் பெயர் உண்டு.

முதலாவது கட்டத்தில் நமது உடலில் இதனுடைய தாக்கம் நிலவுவதால் உடலில் ஓர் அமைதி நிலவும். விமானம் பாரத்தை உதறிவிட்டு பறப்பது போல நடது உடலும் சமநிலையுடன் பயணிக்கும். காரணம் இந்த கோமோன் மேலதிக சக்தியை உடலில் ஏற்றி நம்மை பாதுகாத்துக் கொள்கிறது. இது ” தப்பிப் பிழைக்கும் கட்டம் ” இதை நாம் புரிந்து.. மகிழ்வாக நடந்து, இந்த நெருப்பாற்றை கடந்துவிட வேண்டும்.

ஸ்ரெஸ் தரம் இரண்டு

அட்றனலின் என்ற தன்னம்பிக்கை கோமோன் வலுவிழக்க கோர்ற்ரிசோல் என்ற கோமோன் அதிலிருந்து பிரிந்து போகும். அதைத் தொடர்ந்து மசில்ஸ்களுக்கு சக்தி தரும் கொழுப்பின் அத்திவாரம் பலவீனமடையத் தொடங்கும்.

அதைத் தொடர்ந்து கோற்றிசோலானது கொழுப்பை வயிற்று பகுதியில் சேர்க்கும், சமகாலத்தில் மசில்களுக்கான சக்தியை இழுத்தும் எடுக்கிறது. இதனால் உடல் வலுக்குன்றிப் போகிறது.

கோர்ற்ரிசோல் வேகமாக சுரப்பதால் சீரோரோனியன் (serotonin) பாதிக்கப்படுகிறது. இது (serotonin) நரம்பு மண்டலம், சமிபாட்டு தொகுதி போன்றவற்றோடு தொடர்புடையது. இது பலவீனமடைய பாரிய பிரச்சனை உருவெடுக்கிறது.

இதானால் பெரும் குழப்பமான சூழல் உடம்பில் ஏற்படும். மெல்ல மெல்ல உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி வீழ்ச்சியடையும். முடிவில், உடம்பின் செயற்பாட்டு வேகம் குறையும். அதைத் தொடர்ந்து மற்றைய பிரச்சனைகள் உருவாகும். தலைவலி, தூக்கம் இல்லாமை காரணமாக ஸ்ரெஸ் நிலையை நோக்கி வேகமாக உடல் பாதாளம் நோக்கி தள்ளப்படும்.

ஸ்ரெஸ் தரம் மூன்று

இப்படியாக ஸ்ரெஸ் கோமோன்கள் நீண்ட காலமாக தப்பான வழியில் ஆதிக்கம் செலுத்துவதால், வேறு வழியின்றி ஸ்ரெஸ்சிற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தோன்ற ஆரம்பிக்கும். உடல் வேகமாக களைப்படையும்.

கோர்ற்ரிசோல் குறைவாகவோ அதிகமாகவோ உடலில் சுரக்க ஆரம்பித்தால், இயல்பாகவே களைப்பு ஏற்படும். இதனால் எமது உற்சாகம் குறைவடையும், தூக்கம் கெடும், ஞாபகசக்தி குறையும். அத்தருணம் ஸ்ரெஸ்சிற்கு எதிரான கோமோன்களின் சுரக்கும் தன்மையும் வலுவிழந்து போகும்.

அதைத் தொடர்ந்து பல உணர்வுகள் ஏற்படும். இந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்ற உணர்வு ஏற்படும். எதிர்காலம் பற்றிய கனவுகள் கலைந்து போகும். உறவுகளோடு பகை ஏற்படும், காது கொடுத்து ஒரு விடயத்தை கேட்க முடியாத நிலை வரும். படிப்படியாக நம்பிக்கை இழந்து மன முறிவடைய நேரிடுகிறது.

அவ்வளவுதானா இல்லை.. தொடர்ந்து பல்வேறுபட்ட உடலியல், உளவியல் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும். களைப்பு என்பது முக்கிய பிரச்சனையாகி, மனதில் குழப்பம், பயம், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். முடிவாக வழி தெரியாது செல்லும் கார் சுவரோடு மோதுவது போன்ற ஆபத்தான நிலை உருவாகும். இவ்வாறான நிலை வந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் தாமதிக்கக் கூடாது.

ஸ்ரெஸ்சை அடையாளம் காண்பது அவசியம்

இங்கு மிக மிக முக்கியமான விடயம் ஸ்ரெஸ்சை கண்டிப்பாக அடையாளம் காண வேண்டும். ஏனென்றால் இது உங்களுடைய வாழ்க்கை இதை காப்பாற்ற வேண்டியது உங்களுடைய பொறுப்பாகும்.

ஸ்ரெஸ்சை சிறியதாகவும் பின் முழுதாகவும் நம்மில் இருந்து நீக்கிவிட வேண்டும். அப்படி நீக்காவிட்டால், அவ்வளவுதான் வேறு எதையுமே செய்ய முடியாத ஸ்தம்பித நிலை வரும்.

நீங்கள் எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசுகிறீர்களா..? போதும் உடனடியாக எச்சரிக்கை கொள்ளுங்கள். எது சரி எது தவறு என்று ஆராய்ந்து உங்கள் வாழ்க்கை போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துங்கள். ஏனென்றால் மாற்றி சிந்திப்பது ஸ்ரெஸ் நிலைக்கு எதிரானதாக அமையும்.

அதிகமான மனிதர்கள் அதிகம் உழைக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டு ஸ்ரெஸ் நிலையை அடைகிறார்கள். ஆகவே அமைதியாக இருக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.
– ஓற்றோ லுட்வி.

கி.செ.துரை 10.02.2019

தொடரும்….

Related posts