முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு!

இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும், நடிகருமான விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.

நாளை ரஜினி இல்லத்தில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது.

இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் ரஜினி. தனது நண்பரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான நடிகர் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ரஜினி நேரில் அழைப்பு விடுத்தார்.

அந்த வரிசையில், தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்தார் ரஜினி.

இன்று பிரதமர் மோடி திருப்பூருக்கு வருகை தருவதால், முதல்வர் அங்கு செல்ல இருக்கிறார். எனவே, காலையிலேயே அவரை சந்தித்து ரஜினி அழைப்பிதழ் வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts