கமல்ஹாசனை திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார்

திமுகவை ஊழல் கட்சி என கமல்பேட்டி அளிக்க, தற்கு பதிலடி தரும் விதமாக வெற்றிடம் என நம்பி வந்தவர் விரக்தியில் பேசுகிறார் என கமல்ஹாசனை திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் ஆரம்பித்ததிலிருந்து லேசான உரசல் திமுகவுக்கும் அவருக்கும் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் நடத்திய அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு நேரடியாக வந்து அழைப்பு விடுத்தும் திமுக கலந்துக்கொள்ளாததும், திமுக கூட்டும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ம.நீ.மய்யத்தை அழைக்காததும் திமுக மக்கள் நீதி மய்யத்தை தள்ளியே வைத்துள்ளது என்கின்றனர்.

மறுபுறம் மத்திய மாநில அரசுகளை விமர்சிப்பதில் கமல் கடுமை காட்டுவதில்லை என்ற விமர்சனம் இருக்கும் வேளையில் நேற்று பேட்டி அளித்த கமல் திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள், ஊழல் பொதியை நாங்கள் சுமக்க முடியாது மக்கள் அதை புறக்கணிக்கவேண்டும் என்று பேட்டி அளித்தது பரபரப்பை.

இதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“வெற்றிடம் என நினைத்து கட்சி தொடங்கி ட்விட்டர் கனவுகளில் மிதந்தபடி, அரசியல் செய்ய நினைக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனக்கான விளம்பரம் தேடிக்கொள்வதற்காக திமுக நோக்கி விமர்சனம் செய்வது அவரது அரை வேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது.

அடிமைத்தனமும் அவலட்சண நிர்வாகமும் கொண்ட அதிமுக ஆட்சியை விமர்சிக்கும் நேரத்திலும், அதற்கு சரிசமமாக திமுக. மீதும் விமர்சனக் கணைகளைத் தொடுத்து, தன்னை ‘மய்ய’த்தில் நிற்கும் நடுநிலைவாதி போலக் காட்டிக்கொள்ளும் அரதப் பழசான டெக்னிக்கையே கமல் கையாள நினைக்கிறார்.

திமுகவை அழுக்குப் பொதி, ஊழல் கட்சி என கமல் விமர்சித்திருக்கிறார். ‘கருணாநிதியிடம் தமிழ் கற்றேன்’ என்று சொல்லும் கமல், அந்தக் கருணாநிதியின் தலைமையில்தான் அரை நூற்றாண்டு காலம் இந்தப் பேரியக்கம் நெருக்கடி நெருப்பாறுகளில் எதிர் நீச்சல் போட்டு நிலைத்திருக்கிறது என்பதை மறந்தது எப்படி? மறைப்பது ஏன்? திட்டமிட்டு புனையப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொண்டு புடம் போட்ட தங்கமாக வெற்றி பெற்ற இயக்கம் திமுக.

திராவிடம் பற்றி விளக்கவுரையாற்றும் கமல், திராவிடப் பேரியக்கமான திமுக மீது தீரா விஷத்தைக் கக்குவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எவர் தூண்டி விடுகிறார்கள்?

தேர்தல் நேரத்தில் அவருக்குத் தோன்றிய திடீர் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமா? பதற்றமா? திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதை அறிந்தும், காங்கிரஸ் கட்சிக்கு தூது விட்டு அது முடியாமல் போனதால், தன் ஆற்றாமையைக் கொட்டுவதற்கு திமுகவின் மீது புழுதி தூற்றுவது அவரது அரசியல் கத்துக்குட்டித் தனத்தையே காட்டுகிறது.

திமுக மீது விமர்சனம் செய்யும் கமலுக்குத் தெரியாதா, ஊழலுக்காக உச்சநீதிமன்றம் வரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி, தனது திரைப்படத்துக்கு கடும் நெருக்கடி தந்து, இந்த நாட்டை விட்டே வெளியேறும் மனநிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாதான் என்பது?

ஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவை குன்ஹா கோர்ட்டே தண்டித்த நிலையிலும், அவர் உயிருடன் இருந்தவரை அதுபற்றி வாய் திறக்க வக்கில்லாமல், அவர் இறந்த பிறகு திடீர் ‘விஸ்வரூபம்’ எடுத்து வீர வசனம் பேசியபோதே கமலின் மேக்கப் மக்கள் முன் கலைந்து விட்டது.

கறுப்பா, காவியா, கறுப்புக்குள் காவியா என்று தன் நிலை என்னவென்ற குழப்பத்தில் இருக்கும் கமலுக்கு, கறுப்பு – சிவப்பு எனும் இருவண்ணமும் தங்கள் உயிரிலும் உதிரத்திலும் கலந்திருக்கும் கோடானுகோடி தொண்டர்களைக் கொண்ட தி.மு.க மீது பழி சுமத்த என்ன அருகதை உள்ளது,

அரசியல் என்பது படத்துக்குப் படம் மாற்றிக்கொள்கிற இயக்குநர்கள் அல்ல. அடித்தட்டு மக்களின் துன்ப துயரங்களில் துணை நிற்பதாகும். ஊராட்சிகள் தோறும் கூட்டம் நடத்தி மக்களைச் சந்திக்கும் இயக்கத்துக்கும், ஊர் சுற்றிப் பார்க்கப் போவது போல டூர் அடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

‘இதுதான் எனக்கு கடைசி படம், நான் அரசியலுக்கு வந்து விட்டேன்’என்று சொன்னவர், பிக் பாஸ்களிலும், திரைப்படங்களிலும் மீண்டும் நடிக்க வந்து விட்டு, மக்களுக்கு அளித்த முதல் வாக்குறுதியையே காப்பாற்றாத நிலையில் திமுகவைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

வெற்றிடம் என நம்பி வந்து வீணாய்ப் போனவர், விரக்தியின் உச்சத்தில் நிதானம் தவறிப் பேசுகிறார். கட்சி தொடங்கிய ஓராண்டுக்குள் கலைந்து போய்விட்ட தனது அரசியல் அரிதாரத்தை சரி செய்ய, அவதூறுச் சேற்றை கையில் அள்ளி முகத்தில் பூசி, புது மேக்கப் போடுகிறார் கமல். இனி அவர் போடும் வேடம் எதுவும் அரசியலில் எடுபடப் போவதில்லை.”

இவ்வாறு வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.

Related posts