ஜமால் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது: ஐ.நா. அறிக்கை

பத்திரிகையாளர் ஜமால் கொலை சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.குழு நடத்திய விசாரணையில் வெளியிட்ட முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ”சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில் ஜமால் தனது சொந்த நாட்டுக்குத் திரும்பி சவுதி அரசை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் அவர் மீது புல்லட் பயன்படுத்த இருப்பதாக முகமது பின் சல்மான் கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஜமால் கஷோகிஜி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இந்த நிலையில் அவர் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதால் உலக அளவில் சவுதிக்கு எதிரான அதிர்வலை ஏற்பட்டது.

முதலில் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய சவுதி பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.

Related posts