நாற்பது தொகுதிகளிலும் தனித்தே போட்டி கமல் அறிவிப்பு

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி; தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு கடினமான பணி என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாவும் கூட கடினமான பணிதான். இருந்தாலும் அதில் நான் அனுபவித்து பணிகளை செய்தேன். சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

அதே போன்று அரசியலும் இருக்கும். மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். எங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் நிலை உருவாகும்.

மக்கள் நீதிமய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அதை முறியடித்து இருக்கிறோம்.

இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட நாங்கள் பிரபலம் அடைந்து இருக்கிறோம். அதாவது எல்லா இடங்களிலும் எங்களது கட்சி சென்றடைந்துள்ளது.

கிராமசபை கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். இதன்மூலம் அடிமட்ட மக்களை சென்றடைந்து வருகிறோம். எங்கள் திட்டங்களைத்தான் இப்போது பல கட்சிகளும் காப்பி அடிக்கின்றன.

எங்களுக்கு தடை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. எங்களது கூட்டத்துக்கு அனுமதி தருவது போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

அதே நேரத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல லட்சம் மக்களை நான் சந்தித்து விட்டேன்.

நான் சிறு வயதில் இருந்தே இது போன்ற கூட்டங்களை பார்த்து பழக்கப்பட்டு உள்ளேன். கடந்த காலங்களில் மக்கள் என்னை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அன்று என்னை சினிமா நடிகர் என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு கூடினார்கள். இப்போது அதில் மாற்றம் உள்ளது. என்னை முக்கிய தலைவராக கருதி பார்க்கிறார்கள்.

பல மக்கள் என்னை ஒரு தலைவராக பார்த்ததால் தான் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவானது. என்னை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். நம்பிக்கையோடு களம் இறங்குகிறோம்.

எங்களுடைய சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக சாதனை செய்வோம்.

எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசுகிறார்கள். சில கட்சிகளை பொறுத்தவரை எங்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், யாரையும் எங்கள் தோளில் சவாரி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம்.

காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து முடிவுகள் இருக்கும்.

நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறோம். இதில், எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது.

நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னது எனது கட்சியை குறிப்பிட்டு தான் சொன்னேன். நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம்.

தேர்தலில் எங்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய வி‌ஷயத்தில் மற்ற கட்சிகளுக்கு நாங்கள் கடுமையான சவால் ஏற்படுத்துவோம். நாங்கள் ஆழமாக ஊடுருவி செல்வோம்.

ஊழல் புகார் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க.- தி.மு.க. இருகட்சிகளுமே தவறு செய்துள்ளன.

அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை இது அகற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த அரசால் தமிழ்நாட்டில் பேரழிவும், தோல்விகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மதச்சார்பற்ற தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சீரழித்து வருகிறது. நாட்டின் நிலைமையே இந்த ஆட்சியால் சீர்குலைந்து இருக்கிறது.

பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அந்த கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு காரணமாக இருக்கின்றன.

ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டுமா? என்ற வி‌ஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஒருநபரை முன்னிறுத்தி எதுவும் சொல்ல முடியாது.

ஆனால், ஒரு மனிதன் மட்டுமே நாட்டை நடத்தி சென்று விட முடியாது. அது ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். அதற்கு ராகுல்காந்தியை பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு கருவி வேண்டும்.

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்தால் அது எங்களுக்கு சாதகமான வி‌ஷயம்தான். சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்களது ஒரே நோக்கம்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பழைய கட்சிகள் செய்கின்றன. அவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து பணத்தை சுரண்டி வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் சாதாரண மக்களுக்கு எதிராக இருக்கின்றன. அந்த மக்களின் ஆதரவு எங்களை நோக்கி இருக்கும்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் சாதிக்க முடியும் என்று சொல்வது தவறான கருத்து. அன்றைய கால கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகள் தேவைப்பட்டு இருக்கலாம். எங்களை பொறுத்தவரையில் இந்தியை எதிர்க்கவில்லை. அதை திணிப்பதை மட்டும்தான் எதிர்க்கிறோம்.

ஊழல் அனைத்து மட்டத்திலும் ஒழிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் என்பது கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றில் மட்டும்தான் இருக்க வேண்டும். மது வியாபாரம் மூலம் சாராய மாபியாக்கள் ஆழமாக காலூன்றி இருக்கிறார்கள்.

மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவது அவசியமானது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அழிக்க முடியும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சம்பந்தமான வி‌ஷயத்தில் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட வி‌ஷயம்.

ஜெயலலிதா மரணம் சில சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மட்டும் அல்ல, கொடநாடு கொலை விவகாரம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு வயதான பெண் என்னிடம் நடந்து வந்து மற்றவர்களை போல் நீயும் என்னை ஏமாற்றி விடாதே? என்று கூறினார்.

இதேபோல் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக என்னை சந்திக்கிறார்கள். மாநிலத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம். அதை சிறப்பாக செயல்படுத்துவது எங்களது ஒரே நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related posts