தவறான பாதையிலேயே கூட்டமைப்பு செல்கிறது விக்னேஸ்வரன் பகிரங்க குற்றச்சாட்டு.

“தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவறான வழியில் பயணிக்கிறது கூட்டமைப்பு தற்போது செல்லும் பாதை நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்பதே எனது கணிப்பு ” இவ்வாறு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்னணியின் கிளிநொச்சி பிராந்திய மாநாடு நேற்று காலை 03.02.2019 வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

” புதிய அரசமைப்பு என்பது ஒரு நாடகம்.. தீர்வு காண முயற்சி என்ற இந்த நாடகத்தின் மூலம் எமது அடிப்படை கோட்பாடுகளை கைவிட செய்வதன் மூலம் தீர்வு இல்லை என்ற ஒரு நிலையை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாக இருக்கிறது” என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார்.

” எமக்குள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு எமது இனத்துக்கு நாமே குழி பறித்துக்கொள்ளும் நிலைமை இனிமேலும் வேண்டாம் .. என்றே தம்பி பிரபாகரன் முரண்பட்டு நின்ற பல்வேறு தமிழ் கட்சிகளை து}ரநோக்கு சிந்தனையுடன் ஒன்று சேர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார் ” ஆனால் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை மாறி பிழையான வழியில் செல்ல முற்பட்ட பொழுது பலர் எதிர்த்தார்கள்.

நான் நீண்ட கால அரசியலில் திழைத்தவனும் அல்ல, ஆயுத கலாச்சாரங்களில் உடன்பாடு உடையவனும் அல்ல..! எனினும் தமிழின் மீது தீராத பற்று கொண்டவன், தமிழர் வரலாறு பற்றி அறிய விருப்பம் உடையவன். தமிழ் மக்களின் விடுதலையின் மீது அவா உடையவன்.

அந்த வகையிலேயே சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தமிழ் தலைமைகள் என்னை அணுகி வடமாகாணசபை தேர்தலில் கலந்துகொண்டு முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுமாறு அழைத்த பொழுது சுமார் ஆறு மாத காலத்தின் பின்னர் அதற்கு சம்மதித்தேன் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது கூட்டமைப்பு என்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னேற்ற அமைக்கப்பட்ட ஓர் அரசியல் கட்டமைப்பு அல்ல, தமிழ் மக்களின் நலன்கருதி அமைக்கப்பட்ட ஒரு கூட்டு அமைப்பு அது.

எம்மை எமக்குள்ளேயே முட்டி மோத வைத்து பலவீனமடைய செய்ய முயல்கிறார்கள். ஊடகங்களையும் இதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல கொள்கையின்பால் ஒன்றானவர்கள் ஒன்று திரண்டால் நாம் எமது இலக்கை அடையும் வழிகளை அழகுபடுத்திக் கொள்ளலாம். குழி தோண்டும் பணியில் ஈடுபட்டால் நமது பயணம் தடைபடும்.

எனவே அன்பார்ந்த உறுப்பினர்களே பொதுமக்களே நாம் அனைவரும் எமது பல்வேறு கடமைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அரசியல் முன்னெடுப்புக்கள் முழுமையாக ஈடுபடுவோம் என்றார்.

நான் வேண்டுமெனில் வெளிநாடு சென்று சொகுசான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், எமது மக்களின் நிலை கண்டு உங்களுடன் நின்று போராட முன் வந்துள்ளேன். சகல உரிமைகளுடன் கூடிய தமது இனத்தை கூடிய சுயநிர்ணய உரிமை கொண்ட, வட கிழக்கைச் சேர்ந்த ஓர் இனமாக தமிழினம் வாழ வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும், என்ற அவாவில் தான் நான் இன்றும் இங்கிருந்து போராடி வருகிறேன். இதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்று அவர் கேட்டார்

Related posts