இனியும் உங்களை தலைவர்களாக ஏற்க தமிழ் மக்கள் தயாராக இல்லை

இனிமேலும் எங்கள் தலைவர்களாக உங்களை தமிழ் மக்களாகிய நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இவ்வாறு நேற்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முன்னிலையில் தெரிவித்தார,; சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய பங்குதந்தை றெக்ஸ் சவுந்தரா அடிகள்.

மூத்தோரையும் என்ற தலைப்பில் மக்கள் கருத்தறியும் அரசியல் கருத்தரங்கு தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். நான் அரசியல்வாதி அல்ல அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. ஆனால் அரசியல் நகர்வுகளையும் அரசியல் செய்திகளையும் உற்று பார்ப்பவன்.

ஒரு பொதுமகனாக ஒரு தமிழ் மகனாக நின்று, இன்றைய எங்கள் நிலைமைகளை பார்க்கும்போது என் உள்ளத்தில் எரியும் ஏமாற்றங்களையும் இங்கு கொட்டி தீர்க்க வந்துள்ளேன்.

என் வார்த்தைகள் கருத்துக்கள் உங்களை சுடலாம் ஆயினும் இது உள்ளத்தில் இருந்து வரும் வலி. இன்றைய அரசியலில் பொது மக்களின் கருத்துக்கள் உங்களுக்கு தெரியாதா? அது நன்றாக உங்களுக்குத் தெரியும். இவ்வளவு காலமாக திரும்பி பார்க்காத மக்களை இன்று ஏன் திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

எனது பார்வையில் இந்த அரசியல் களம் என்றால் எதிர்வரும் தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்க வருவது, நாடி பிடித்துப் பார்க்கும் உளவு வேலையாகும். இப்போது இங்கு மாற்றுத் தலைமை ஒன்று உருவாகி வருகிறது என்பதால் அதற்கு ஈடு கொடுத்து உங்கள் தலைமையை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நகர்வு இது.

எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஏக்கங்களை தவிப்புகளை ஒன்று திரட்டி 2015ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞானமாக எங்களுக்கு காட்டினீர்கள் அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து உங்களை அனுப்பி வைத்தோம் ஆனால் நீங்கள் தடம்மாறி போனீர்கள்.

ஏன் என்று கேட்டால் அது அரசியல் ராஜதந்திரம் என்கிறீர்கள். ஆனால் அது தோற்றுப் போனதைத்தான் நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். உதாரணத்துக்கு அரசியலில் என்று பேசு பொருளாக இருக்கும் புதிய அரசமைப்பை நிறைவேற்றுவது பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் கூற்று என்ன..? என்னால் தனித்து ஒன்றும் செய்ய முடியாது நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு ஒருபோதும் வராது இதனை அமைச்சர் மனோ கணேசன் இரண்டு வருடங்களுக்கு முதல் கூறியதை இப்போது யாழ். வந்து பகிரங்கமாகவே கூறுகின்றார். ஆனால் நடிகர் கவுண்டமணி சொன்னதைப் போன்று நீங்கள் சொல்வதற்கு இன்னும் நீண்ட து}ரம் இல்லை..! அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்றுதான் கூறப்போகிறீர்கள் .திண்ணைகளிலிருந்து பத்திரிகை வாசிக்கிற யாழ்ப்பாணத்துக்கு இன்றைய அரசியல் புரியும். ஆயினும் எங்கள் மனக் குமுறல்களை உங்களுக்கு கூறிவிடுகின்றோம்.

இன்று தமிழ் மக்களாகிய நாம் எங்களுக்கு ஒரு சமயத் தலைவர், சமூகத் தலைவர் அரசியல் தலைவர் என்று யாரும் இல்லாத வெறுமையைத்தான் பார்க்கிறோம். இங்கே இருக்கின்ற தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் நேர்மை இல்லாதவர்கள்.

தெற்கில் ஒரு கதை வடக்கில் ஒரு கதை சொல்லும் திறமை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே உண்மைதன்மை காண முடியாதுள்ளது. நோக்கற்றவர்கள், கொள்கையற்றவர்கள் தமிழ் மக்களாகிய உங்களை விலைபேச பின் நிற்க மாட்டார்கள்.

இன்று வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்று தலைமையகமாக உருவாகி வருவதை பற்றி சாதகமான எதிர்மறையான கருத்துக்கள் உலவுகின்றன. அவை எப்படியாக இருந்தாலும் என்னுடைய கேள்வி என்னவெனில் இந்த மாற்றுத் தலைமை உருவாவதற்கு காரணம் என்ன ?

மாகாண ஆட்சியில் இருந்தபொழுது கூட்டமைப்புடன் பல தடவைகள் முரண்பட்டது எல்லோரும் அறிந்ததே..! இனவாத கட்சிகள் இடையே அதிகார போட்டிகளின் வெளிப்பாடு கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த முரண்பாடுகளைத் தீர்த்து வைத்த கூட்டமைப்பின் பங்களிப்பு முதன்மையானது ஆகும் காத்திரமானதாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

உங்களது இந்த செயற்பாட்டால் தமிழ் மக்கள் அடைந்த நன்மை என்ன..? இல்லை நீங்கள் தான் அடைந்த நன்மை என்ன..?
பதவி இழந்த பிரதமர் மீண்டும் தம் பதவியை பெற்றுக் கொண்டார்..!
பதவி பறிக்கப்பட்ட மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது..!
வில்லங்கமாக மூக்கை நுழைத்துக் கொண்டு உங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனது..!
இது தமிழ் மக்களாகிய எங்களுக்கும் அவமானமாகிவிட்டது..!
இந்த இடத்தில் கவிஞர் மேத்தாவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன அவன் பட்டு வேட்டி பற்றி கனவு கண்டு கொண்டிருந்த பொழுது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்பதுதான் அது. இன்றைக்கு கோவணமும் இல்லாமல் அம்மணமாக நிற்கின்றோம்.

இதுவரை நீங்கள் சாதித்தது என்ன..? உங்கள் பதவி மோகத்தாலும், அங்கே எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்த எதிர்க்கட்சி பதவி தமிழ் மக்களுக்கா? இல்லை கூட்டமைப்புக்கா? இல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் என்ற தனிமனிதனுக்கா..? அது சம்மந்தன் என்ற தனிமனிதனுக்குத்தான் என்றே எங்களுக்குப் புரிகிறது.

உங்கள் சுயநலத்துக்காக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற போர்வையை உங்கள் மேல் போர்த்தி கொண்டு, எங்களை ஏமாற்றி விட்டீர்கள். உலக நாடுகளுக்கு நீங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர், என்ற மாயையை தோற்று விட்டீர்கள.; அதனால் ஏமாற்றப்பட்டவர்கள் நாங்கள் தான.;

இந்த எதிர்க்கட்சி பதவியை வைத்து நீங்கள் சாதித்தது என்ன? மக்களுக்கு பெற்று தந்தது என்ன? விடுவிக்கப்பட்ட நிலங்களையும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகள் என்று சொல்லப் போகிறீர்களா ? இது எல்லாம் உங்கள் எதிர்க்கட்சி பதவி அல்லது நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றதால் எதுவும் கிடைக்கவில்லை.

ஓர் எதிர்க்கட்சி தான் சார்ந்த மக்களை ஏமாற்றி, ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் என்றால் அது கூட்டமைப்புதான். இந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் நீங்களும் நாங்களும் தான் என்று போட்டுத்தாக்கினார்.

அலைகள் 04.02.2019

Related posts