ஜனாதிபதி, பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

133 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த இலங்கை, சுயாதீன இராச்சியம் என்ற நிலையை அடைந்து வந்த இனத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி இவ்வாறு விழாக்கோலத்துடன் நினைவு கூருகிறோம்.

ஆயினும் பெற்ற அந்த சுதந்திரத்தை உயரிய அர்த்தத்தினை அடைவதற்கான புதிய நோக்குடன் புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இத்தருணத்தில் எம் அனைவரினதும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
————

பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

´சுதந்திரம்´ மிகவும் அர்த்தமுள்ளதாக மாற வேண்டுமாயின் ஒரு நாட்டில்´ மக்கள் சமூகமொன்றில் மனிதனைப் போன்றே பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் என அனைத்து அம்சங்களிலும் ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுதந்திரத்தை வெறுமனே ஒரு கொண்டாட்டம் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு முறையான திட்டமிடலும் கூட்டு அர்ப்பணிப்பும் அத்தியாவசியமானதாகும்.

நீண்டகாலமாக எமது நாடு அடிமைப்பட்டிருந்த வெளிநாட்டவரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றமையைக் கொண்டாடும் சுதந்திர தினமானது, இன, சமய பாரபட்சங்களைத் தோற்கடித்து, அவற்றைத் தாண்டிச் சென்று ´தேசிய சுதந்திரத்தை´ மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் சமூக மாற்றத்திற்கு வழியமைக்கக்கூடிய கலந்துரையாடலுக்கும் செயற்பாடுகளுக்கும் சிறந்ததோர் சந்தர்ப்பமாகும்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறுபட்ட தடைகள், சவால்கள் மத்தியில்கூட புதிய சமூக, அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்கும், ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும் நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் சிறந்த பெறுபேறுகளை நாம் சமூகம் என்ற வகையில் இன்று அனுபவித்து வருகிறோம். அந்த சிறந்த சமூக மாற்றங்களே ஜனநாயக விரோத, அதிதீவிர சக்திகளுக்கு எதிராக எம்முடன் கைகோர்த்து நின்றன.

71 ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் முன்னேற்றகரமான சமூக, அரசியல் சூழலொன்றில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ்வதற்குப் பலமான பொருளாதாரம், நிலையான அரசு, வளமான தேசத்தினை உருவாக்க ஒன்றிணைந்து செயற்பட உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

————-

Related posts