யோகசாமி என்ற அழகன் இன்று இல்லை

நேர் உச்சிக்கு சற்று இடது புறமாக வகிடு விட்டு அலை போன்று கேசத்தை மேடும் (இம்மாதிரியான ஸ்ரைலை ‘குணுக்கு’ என அழைப்போம்.) பள்ளமாக கொண்ட மாநிறம் உடையவரும், பார்த்தவர்களை உடன் வசீகரிக்கக் கூடிய புன்னகையும் அழகிய தோற்றமும் கொண்டவர்தான் நான் முதலில் பார்த்த யோகசாமி மாஸ்ரர். வாலிபோல் என்ற கரப்பந்தாட்டத்தில் என்னை முதன் முதலாக ஈர்த்தவர்களில் அரியாலை விளையாட்டுக் கழகத்திற்காக ஆடிய சீவரத்தினம், குணரத்தினம், மற்றும் இரத்தினசிங்கம் மாஸ்ரர். அடுத்ததாக நவஜீவன்ஸ், யங்கம்பன் போன்ற கழகங்களுக்காக ஆடிய தங்கவடிவேல் மாஸ்ரர், யோகசாமி மாஸ்ரர், மற்றும் விஜயன் ஆகியோர். செற்றப் ஆட்டத்திலும், உலக அங்கீகாரம் பெறாத ஓவர் கரப்பந்தாட்டத்திலும் சரி இவர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவதை எனது சிறுவயதில் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.

இவர்களில் தங்கவடிவேல் மாஸ்ரர், யோகசாமி மாஸ்ரர் ஆகியோர் தொடர்ந்து சிவியான் மைதானம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் சிறப்பாக விளையாடிய படியால் பலரையும் ஈர்த்தது போன்று என்னையும் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை. அடிக்கு தங்கவடிவேல் மாஸ்ரரும், அவருக்கு செற்றப் பண்ணி கொடுப்பதற்கு யோகர்சாமி மாஸ்ரரும்; , மற்றும் விஜயன் என்ற பலமான வீரன் இருந்ததாலும் அவர்கள் விளையாடுகின்ற அணி முன்னணியில் இருந்ததில் வியப்பில்லை. யோகசாமி மாஸ்ரர் தோற்றத்தில் மட்டுமல்ல. விளையாடுவதில் கூட தனி அழகு தான். அவருக்கென ஒரு ஸ்ரைலை கொண்டிருந்தமையும், எந்த விதத் தவறு விடாமல் விளையாடும் ஆற்றலும் கொண்டிருந்தமை அவரை மற்றவர்களிடமிருந்து விளையாட்டில் வேறுபடுத்திக் காட்டும்.

என்னைச் செதுக்கியவர்களில் யோகசாமி மாஸ்ரரும் ஒருவர். 70களில் பதுளை மாவட்டத்திற்கு 30க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சிக்கலாசாலையில் இருந்து அனுப்பப் பட்டார்கள். அவர்களில் 10க்கு மேற்பட்டவர்கள் இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் தீவிரமடைந்திருந்த தீண்டாமை என்ற புற்றுநோய்க்கு எதிராகப் போரடிக் கொண்டிருந்த சீனக் கம்யூனிஸ்ற் சார்பான வெகுஜன இயக்கப் போராட்டங்களில் நேரடியாகப் பங்கு கொண்டவர்களும் அடங்குவர். அந்த வரிசையில் தங்கவடிவேல் மாஸ்ரர், பெனடிக் பாலன், கிருஸ்ணபிள்ளை மாஸ்ரர், யோகசாமி மாஸ்ரர் போன்றோர் முக்கியம் பெறுகின்றனர். இந்த ஆசிரியர் குழாமுடன் ஒன்றாக இருந்து அனுபவக் கல்விகளைக் கற்றவர்களில் நானும், நண்பர் கலாபூசணம் அ.க.ஜுனைதீன் அவர்களும் முக்கியமானவர்கள்.

அவரின் அழகியல் நடவடிக்கை என்னையும் பாதித்ததில் ஆச்சரியமில்லை. தன்னை அழகு படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவழிப்பார். என்ன வேலை செய்தாலும் மிகவும் நேர்த்தியாகச் செய்வார். அதற்காக அதிக நேரத்தையும் செலவழிப்பார். தேங்காய் திருவுவதிலும் கூட ஒரு தனி அழகு இருக்கும். இதன் காரணமாக சக ஆசிரியர்களிடம் தாமதத்திற்காக ஏச்சும் வாங்குவார். எப்படிப் பேசினாலும் தனது பொறுமையை இழக்கமாட்டார். அந்தளவிற்கு மிகச் சிறந்த பொறுமைசாலி. அதுமட்டுமல்லாமல் அவரிடம் பல திறமைகள் நிறைந்திருந்தன. சிறந்த ஆசிரியராக விளங்கிய அவர் படங்கள் வரைவதிலும், சிறப்பாக விளம்பரப் பலகைகள், மற்றும் வீட்டுக்கான சித்திரவேலைப்பாடுகள் அமைந்த சீமெந்தில் அமைக்கப்படும் சித்திர வேலைகள், வீட்டின் முகப்புப் பெயர்கள் போன்றவற்றை மிக அழகாகச் செய்வார். எங்கள் வீட்டின் ‘சந்திரோதயம்’ என்ற பெயரை முகப்பில் தங்கவடிவேல் மாஸ்ரருடன் சேர்ந்து வடிவமைத்தவர் யோகசாமி மாஸ்ரர் தான்.

மலையகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் மிக அக்கறையுடன் ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர். தோட்டப் பகுதிகளில் நடைபெறும் கரப்பந்தாட்டப் போட்டிகளுக்கு தங்கவடிவேல் ஆசிரியருடன் மாஸ்ரரும், நானும் சென்று உதவி மத்தியஸ்தர்களாக கடமையாற்றிய அனுபவங்களும் ஞாபகத்தில் வந்து போகின்றன. எனது தந்தையாருடன் மிக நெருக்கமான உறவைப் பேணியவர்களில் யோகசாமி மாஸ்ரரும் ஒருவர்.
அவர் நன்றாகப் பாடுவார் என்ற விடயமும் எனக்கு அண்மையில்தான் தெரிந்தது. பதுளையில் இருந்த போது காலஞ்சென்ற தங்கவடிவேல் மாஸ்ரர் உடன் சேர்ந்து பஜனைப்பாடல்களைப் பாடுவதைக் கேட்டுள்ளேன். ஆனால் கனடிய நண்பர் ஒருவருடன் நான் பேசும் போது யோகசாமி மாஸ்ரரின் மாணவப் பருவத்தின் அழகை வர்ணித்ததுடன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையின் மாணவர் சங்கக் கூட்டங்களில் பாடுவதை கேட்டு ரசித்ததாகக் கூறியிருந்தார். அந்தளவிற்கு பாடல் திறமையும் அவருக்கு இருந்திருக்கிறது.

நான் பார்த்து ரசித்து வளர்ந்த எனது முன்னோடிகளான யோகசாமி, தங்கவடிவேல் ஆசிரியர்களுடன் ஒரே அணியில் பதுளையில் விளையாடி மகிழ்ந்த சம்பவங்கள் இனிமையானவை. என்னுடன் பல விடயங்களை பகிர்ந்துள்ளதுடன். ஆலோசனைகளையும் வழங்கி நண்பனாகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். காலஞ்சென்றவர்களான பெனடிக்ற் பாலன், கிருஸ்ணபிள்ளை, தங்கவடிவேல் ஆகிய ஆசிரிய நண்பர்களின் வரிசையில் இருந்த கடைசி ஆசிரிய நண்பரும் நம்மை விட்டு எதிர்பாராமல் விட்டுப் பிரிந்தது மிகவும் வேதனையை அளிக்கின்றது. கடந்த வருடம் தம்பி ரகுவின் அன்ன தான நிகழ்வில் மணித்தியாலக் கணக்காக பழைய விடயங்களை இரை மீட்டு மகிழ்ந்தோம். கடந்த வருடம் நடைபெற்ற சிவகாமி இசையமுதம் இறுவட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அரசியலிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டார். கடந்த வருடம் தங்கவடிவேல் ஆசிரியரின் நினைவு மலர் வெளியீட்டில் பெரும் பங்கு வகித்த அவருக்கே இன்று நினைவு மலர் வெளியிட வேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அன்னாரின் பிரிவால் வாடும் அனைத்து உறவுகளுக்கும் எங்கள் குடும்பத்தினரின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உறவுகள் சார்பாக
செகா. சிவபாலசிங்கம் (காந்தி)

Related posts