இளையராஜாவுக்கு 3.5 கோடி சம்பளம் கூடவே பாராட்டு ஏழு கோடி அபேஸ்

7 கோடி ரூபாய் தயாரிப்பாளர் சங்க பணத்தை தன்னிச்சையாக செலவழித்ததாக விஷால் தரப்பினர்மீது நடவடிக்கை கேட்டு எதிர்த்தரப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

விஷால் தரப்பினர் மீது பணம் கையாடல் புகாரை காவல் ஆணையர் அலுவகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான கே.ராஜன், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் கையெழுத்திட்டு புகாராக அளித்தனனர்.

அதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளாக செயல்படும் விஷால் தரப்பினர், தயாரிப்பாளர் சங்க வங்கிக்கணக்கிலிருந்து ரூ. 7 கோடி வரை எடுத்து செலவு செய்துள்ளதாகவும் அதை பொதுக்குழு ஒப்புதல் இல்லாமல் எடுப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இதுகுறித்து புகார் அளிப்பதாகவும் போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறியதாவது:

“விஷால் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 8.75 கோடி ரூபாய் எடுத்து செலவு செய்துவிட்டோம். அதை விழா முடிந்தவுடன் திருப்பி வைத்து விடுகிறோம் என்று கூறியுள்ளார்.

இதில் தனது நண்பர் ரமணா என்பவருக்கு மேடை அமைக்க மட்டும் ரூ. 3.5 கோடி கொடுத்துள்ளார். இளையராஜாவுக்கு 3.5 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால் பாராட்டு நடப்பதே இளையராஜாவுக்குத்தான். யாருக்கு நாம் பாராட்டுவிழா நடத்துகிறோமோ அவருக்கே ரூ.3.5 கோடி கொடுப்பது என்பது ஒரு சந்தோஷமான, விசித்திரமான விஷயம், அதை தயாரிப்பாளர் சங்கம் செய்துள்ளது.

அதே நேரம் இளையராஜா ஷோ அடுத்தமாதம் ஈரோட்டில் நடக்கிறது. அதற்கு அவர் ரூ.1.5 கோடி வாங்கியுள்ளதாக அங்கு சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள். இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு பொதுவான சங்கத்தின் பணத்தை எடுத்துவிட்டு திருப்பி வைக்கிறேன் என்றாலே அது குற்றம். அதற்கு பெயர்தான் பணம் கையாடல் செய்வது என்பது.”

இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் அளித்த பேட்டி:

இளையராஜாவுக்கு பாராட்டு நடத்த நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, எந்த அக்ரிமெண்டும் கிடையாது, எந்த சானலுக்கு ஸ்பான்சர் கொடுத்துள்ளார்கள், சானலிலிருந்து எவ்வளவு பணம் வாங்கியுள்ளார்கள், என்ன பட்ஜெட் என்கிற எந்த விபரமும் இல்லை. அதை எங்களுக்கு தெரியப்படுத்தணும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts