இலங்கையில் உருவாகிறது ஜனநாயக தேசிய முன்னணி என்ற அணி

அடுத்த இரண்டு வாரங்களில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் சக்தி தோற்றம் பெறவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது இந்த நாட்டின் மிகப் பலம் மிக்கதான அரசியல் கூட்டணியாக அமையும் எனவும் குறிப்பிட்டார். இந்த அரசியல் கூட்டணியானது இன, மத, மொழி பேதங்களைக் கடந்த தேசிய அரசியல் அணியாக மாறி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பேரணியாக வளர்ச்சி பெறும் எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

கொழும்பு தெமட்டகொடையில் நிர்மாணிக்கப் பட்ட “சியபத் செவன” வீடமைப்புத் திட்டத்தில் 266வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய அரசியல் அணி தொடர்பாக மேலும் தெளிவுபடுத்திய பிரதமர்: ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், எம்மோடு இணைய இணக்கம் தெரிவித்துள்ளன. அரசியல் அணிகளும் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக உரையாடி இறுதி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கு நாம் ஜனநாயக தேசிய முன்னணி எனப் பெயரிட்டிருக்கின்றோம்.

புதிய அணியுடன் இணையும் கட்சிகள் அவர்களது கட்சியின் தனித்துவத்துடன் செயற்பட முடியும். ஆனால் ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்புக்கு இணங்கியதாகவே அவை இணைந்து செயற்படும். அடுத்த இரண்டு வாரங்களில் புதிய அரசியல் அணியின் அங்குரார்ப்பணம் இடம் பெறவுள்ளது.

இந்த புதிய கட்சியின் உதயம் சில சக்திகளுக்கு சவாலாக அமையலாம். இப்போதிருந்தே இது குறித்து சிலர் பீதியடைந்துள்ளனர். சிலரை எம்மோடு இணைய விடாது தடுக்கும் மறைமுகச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனால் ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளும், தேசத்தை கட்டியெழுப்ப விரும்பும் சக்திகளும் எம்மோடு இணைவதற்கான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

Related posts