டென்மார்க்கில் நிலா முற்றம் கவிஞர்களின் கவியரங்கம்

டென்மார்க்கில் காலத்திற்கு காலம் புதிய புதிய கலை அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுவதும், அவற்றில் பல வந்த சுவடு தெரியாமல் மறைவதும் ஒரு வேடிக்கை வரலாறாக இருக்கிறது.

கடந்த முப்பது வருடங்களில் தோற்றமெடுத்த டேனிஸ் தமிழ் ஒன்றியங்களில் இருந்து மற்றைய தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள் படிப்படியாக குன்றி மறைந்து வருகின்றன.

இவைகள் மீட்கப்பட வேண்டிய புதிய காலத்தில் இப்போது நிற்கிறோம்.. அஸ்தமனம் முடிந்து மறுபடியும் கலைகளின் காலம் நோக்கி உதயமாகிறது டென்மார்க்.

நல்ல கலைகளை கேட்க முடியாமலும், பார்க்க முடியாமலும் திரையிசை பாடல்களுக்கு முழு நேரமும் நடனமாட வேண்டியளவுக்கு கலைகள் அடிவாங்கி பின்தங்கியுள்ளன.

இந்த நிலையில் எழுந்து வருகிறது நிலா முற்றம் என்ற கவிஞர்கள் குழுவினரின் புதிய முயற்சி ஒன்று.

முன்னர் மட்டக்களப்பில் நிலா முற்றம், பௌர்ணிமி நிகழ்வு என்று கலை நிகழ்ச்சிகள் நடந்து நிலா காலத்திற்கு ஒரு மகிமை இருக்கிறது என்று கூறி, யாழ்ப்பாணத்து கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்தது ஒரு புகழ் மிக்க காலம்.

அதுபோல நிலாமுற்றம் ஒன்று டென்மார்க்கில் வருகிறது. இது நல்ல வளங்களை பெற்று முன்னேற வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

எப்படியென்பதற்கு இப்படியொரு விளக்கம் உள்ளது :

முன்னர் யாழ்ப்பாணத்தில் எங்கு தடக்கி விழுந்தாலும் கைகொடுத்து தூக்கிவிட ஓர் ஆசிரியன் வருவானென தமிழக எழுத்தாளர் காலம் சென்ற கி.வா.ஜெகந்நாதன் எழுதியுள்ளார்.

ஆனால் இப்போது பேஸ்புக் வருகைக்கு பின்னர் கவிஞர்களின் தொகை பெருகிவிட்டது. கடைக்கு போனால் காணும் பத்து தமிழர்களில் எட்டுப்பேர் கவிஞர்களாகவும், பாவலர்களாகவும் மிளிர்கிறார்கள்.

தமிழ் கவிஞர்களை அதிகமாக பிரசவித்து வருகிறது.. ஆகவே நிலா முற்றங்கள் அவசியமாக இருக்கின்றன. முகநூலில் எழுதிய ஆக்கங்கள் பெருவாரியான கவிதை நூல்களாக தாயகத்தில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஆயிரம் கவிஞர்கள் எழுதிய தொகுப்பு ஒன்று வருமளவுக்கு கவிஞர்கள்.. இருக்கின்ற கவிஞர்கள் தொல்லை போதாதென்று என்னையும் கவிஞனாக்காதே என்ற சினிமா பாடல் மீண்டும் மீண்டும் மனதிற்கு வருமளவுக்கு கவிஞர்கள்.. கவிஞர்கள்.. கவிஞர்கள்..

இதற்குக் காரணம் முகநூலை பயன்படுத்தி உருவான கவிதைப்பிரவாகமாகும். சரியோ தவறோ ஒரு சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகுவது இதயமுள்ள மனிதர்களின் பெருக்கத்தை காட்டுவதாகும்.

ஒரு செத்தவீட்டுக்கு போனால் கொள்ளி வைக்க விடாது கடதாசியில் கவிதைகளுடன் வருவோர் தொகை உயருமளவுக்கு கவிதைப் பிரவாகம் உள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு டென்மார்க் செத்தவீட்டில் கவிஞர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய் வரிசையாக விட்டு வாசிக்க வேண்டியளவுக்கு கவிஞர்கள் தொகை இருந்தது.

இவைகளை கண்டிப்பாக ஆற்றுப்படுத்த நிலா முற்றம் போன்ற அமைப்புக்கள் அவசியமாகும், இதனால் பல நல்ல படைப்புக்கள் உருவாக வழிபிறக்குமன்றோ..?

மேலும் கவிஞர்கள் என்று பெயர் வைத்து, தாடி வளர்த்து குடியும், கூத்தியும், புகையுமாக திரிந்த பழைய கண்ணதாசன் காலம் கவிஞர் அடையாளமாகக்கூடாது என்ற தெளிவு இன்றைய முகநூல் கவிஞர்களுக்கு இருக்கிறது பாராட்டுக்குரியது.

அந்தவகையில் நிலாமுற்றம் நடத்தும் கவியரங்கம் வரும் ஞாயிறு நடைபெற இருக்கிறது. நல்ல தேடல், கடின உழைப்பு யுனிக்கான வரிகள் இருந்தால் கவியரங்கம் சிறப்புப் பெறுமன்றோ..

காணலாம் கவியரங்கம்.. இதே அறிவிப்பு..

அலைகள் 23.01.2019

Related posts