தேர்தல்களை நடத்திய பின் அரசியலமைப்பு பற்றி சிந்திப்பது தவறல்ல

புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்தும் தேவை எவருக்கும் இருக்காது என தான் நம்புவதாக கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

உத்தேச அரசியலமைப்பு யோசனைகளடங்கிய நிபுணர் குழு அறிக்கையில் நல்லவற்றைப் போன்றே சில குறைபாடுகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான அரசியலமைப்புச்சபை நியமித்திருக்கும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களுக்கு கையளித்து தெளிவுபடுத்தும் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்குழு நேற்று மஹா சங்கத்தினரைச் சந்தித்தது.

சபை முதல்வரும் மலைநாட்டு உரிமைகள் அரச தொழில்முயற்சி அபிவிருத்தியமைச்சரும் கண்டி மாவட்ட அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான இக் குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார தயா கமகே இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித்த ரங்கே பண்டார, மயந்த திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அரசியலமைப்பு யோசனை இரண்டு, மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு திட்டமெனவும் அவரசப்பட்டு கொண்டுவரப்பட்டதொன்றல்ல என்பதை தான் புரிந்துகொண்டிருப்பதாக தெரிவித்த மல்வத்த பீடாதிபதி ஆனால் தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பைவிட ஒரு தேர்தல் ஒன்றுக்கு செல்வதே உசிதமானதாக தான் கருதுவதாக தெரிவித்தார்.

சகல தேர்தல்களையும் நடத்தியதன் பின்னர் அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து சிந்திப்பது தவறில்லை என்று குறிப்பிட்டார்.

அடுத்துவரும் குறுகிய காலத்துக்குள் பல தேர்தல்கள் நடத்தப்படவிருக்கும் நிலையில் எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்று எதுவும் கூற முடியாதிருப்பதாகவும் எனினும் மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் இந்தக் தூதுக்குழு அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரத்தன தேரரை சந்தித்தது.

தற்போது அரசியலமைப்பு கொண்டுவரப்படவோ சட்டமூலம் தயாரிக்கப்படவோ இல்லையெனவும் அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமைகள் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்று யோசனைகளை வழங்கியிருக்கின்றது. இதை முன்வைத்தே நிபுணர்கள் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடி சகல தரப்பினரும் உடன்பாட்டுடன் தான் அரசியலமைப்பு சட்ட மூலத்தை கொண்டுவர முடியும் எனவும் அமைச்சர் லக்ஷ்ன் கிரியெல்ல இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியால் 2/3 பெரும்பான்மை கிடையாது அரசியலமைப்பை கொண்டுவருவதாக இருந்தால் அதனை நிறைவேற்றுவதற்கு கட்டாயமாக எதிர்தரப்பு ஆதரவு அவசியம் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts