அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன்

பிங்க்’ ரீமேக்கில் அஜித்துடன் நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகை வித்யா பாலன்

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கவுள்ள ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தின் படப்பூஜை முடிவுற்று, படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயுத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அஜித்துடன் வித்யா பாலன் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் யாரும் இதனை உறுதிசெய்யவில்லை. ஆனால், வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் அஜித்துடன் நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார்.

‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும், போனி கபூர் கேட்டதாகவும் அதற்காக ஒப்புக் கொண்டதாகவும் வித்யா பாலன் தெரிவித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களான மூன்று பெண்களில் ஒருவராக தான் நடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

’விஸ்வரூபம்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் நடிக்காமல் இருந்தார். தற்போது இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பது நினைவுக்கூறத்தக்கது

‘பிங்க்’ படத்தின் அமிதாப் பச்சனின் மனைவியாக ஒரு சிறு கதாபாத்திரம் இருக்கும். அந்த கதாபாத்திரத்தில் தமிழ் ரீமேக்கில் வித்யா பாலன் நடிப்பார் எனத் தெரிகிறது. இதுவரை ’பிங்க்’ ரீமேக் படப்பிடிப்பு 4 நாட்கள் மட்டும் நடத்தி முடித்துள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரியில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளனர்.

யுவன் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முன்பே ஒப்பந்தமாகியுள்ளனர். அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Related posts