உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19: 02

தெளிவான கண்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். மத்தேயு 6:22

முழப் பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பதுபோல என்று ஊரில் உள்ளவர்கள் பழமொழியைச் சொல்லக் கேட்டிருப்போம். பெரிய பூசணிக்காயைச் சோற்றில் புதைக் கலாமா? இதன் அர்த்தம், தவறு என்று தெரிந்தும், அது சரியே என்று சாதித்து பொய்யை உண்மையாக்கி விடுபவர்கள் உண்டு. அவர்களுக்கான பழமொழிதான் நாம் மேலே வாசித்தது. ஆனால் பொய் பொய்யே.

தேவனுடைய மகிமைக்கென தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் செய்த தீமையான காரியங்களில் ஒன்று தீமையை நன்மை என்று மாத்திரமல்ல நன்மையை தீமையென்றும் சொல்லி நல் நடத்தையின் தார்ப்பரியத்தையே தலைகீழாக்கிப் போட்டார்கள். இதனை நாம் ஏசாயா 5:20 இல் காணலாம். தீமையை நன்மை யென்றும், நன்மையை தீமையென்றும் சொல்லி இருளை வெளிச்சமும் வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து கசப்பை தித்திப்பும், தித்திப்பை கசப்பு என்று சாதிக்கிற வர்களுக்கு ஐயோ! என்று தேவன் சொல்கிறார்.

இன்றும் நமக்கு ஏற்படுகிற ஏராளமான பிரட்சனைகளுக்கு இந்த சாதிப்பின் மன நிலைதான் காரணம். எது சரி எது தவறு என்று ஒருவருக்காக ஒருவர் தீர்மானிக்க முடியாது என்றும், எது சரி என்று எனக்குத் தெரியும், எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்வது மிக இலகு. நாமும் சொல்லி இருக்கலாம். குடி நம்மைக் கெடுக்காது, மணைவி பிள்ளைகளைக் கவனிக்காமல் நடந்தால் பாவம், எப்படியோ பணம் சம்பாதித்தால் போதும் இப்படியாக தீமைகளை சரியென்று சாதிப்பவர்கள் எம் மத்தியில் இருக்கிறார்கள். சாட்டுப்போக்குகள் எப்போ தலை தூக்குகின்றதோ அப்போதே நாம் நன்மை தீமைக்குரிய வித்தியாசத்தையும் உடைத்துப் போடுகிறோம். இது நமக்குப் பெரிய ஆபத்தான தீங்கையே கொண்டு வரும்.

எமது வாழ்விலும் எதையாவது நமக்குச் சாதகமாக சாதித்துக் கொண்டிருக் கிறோமா? நமது வாழ்வுக்கு ஓர் வரையறை உண்டு. நாம் எப்படி வாழ வேண்டும் என்று தேவன் நினைத்து வைத்திருக்கிறாரோ, தேவன் உலகத்தை எப்படிக் காண்கிறாரோ அதேபிரகாரம் இவ்வுலகத்தை பார்ப்பதும் வாழ்வதுமே நமது வாழ்வின் வரையறைகள். இந்த எல்லையைக் கடக்க துணிவோமானால், அது நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வது போலாகும். வெளிச்சத்திற்குரிய இந்தப்பார்வையை, சுயவிருப்பங்கள், இச்சைகள், சுயநோக்கங்கள் இலகுவாக மூடிப்போடலாம். அந்த மூடுதோல் உரிக்கப்படாவிட்டால், நமது பார்வை மாற்றம் அடைவது நிச்சயம். அங்கேதான் நன்மை தீமையாகத் தெரியும்.

தேவனுடைய பிள்ளைகளே, தேவனையும், அவருடைய வார்த்ததையையும் நோக்கும் தெளிவான கண்கள் நமக்கு அவசியம். இதனை வேதம் இவ்வாறு வெளிப்படுத்துகிறது. கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக்கிறது. உன் கண் தெளிவாக தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும். உன் கண் கெட்டதாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் கெட்டதாயிருக்கும். இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால் அவ்வருள் எவ்வளவு அதிகமாயிருக்கும். மத். 6:22-23

நமது கண்கள் எப்படிப்பட்டவை? நாமே நம்மை வருடத்தின் ஆரம்பத்தில் ஆராய்ந்து பார்ப்போம். நமது கண்களை மூடி மறைத்திருக்கும் மூடு தோலை உரித்து நல்லதை நல்லதென்று காணும்படி நமது கண்களை தெளிவாக்கும்படி தேவனிடம் ஜெபிப்போமா!

அன்பின் பரலோக பிதாவே, இந்த சிந்தனையூடாக எனது கண்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி எனது இதயத்தில் உணரப்பண்ணியதற்காக எனது நன:றிகள். இதுவரை காலமும் இவைபற்றி அறியாமல் வாழ்ந்ததற்காக என்னை மன்னியும். இன்றிலிருந்து உமது வழிகளைக் காணும் கண்களாகவும், நன்மையை நன்மையாகவும், தீமையை தீமையாகவும் காணும்படி என்கண்களை தொட்டு தெளிவு படுத்தும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல தகப்பனே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts