லசந்த கொலை, ‘மிக்’ கொள்வனவு; கோத்தாவின் TV பேட்டி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருட காலத்துக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தனியார் தொலைக்காட்சியொன்று நடத்தியிருந்த நேர்காணலின் முழுமையான ஒளிபரப்பை சி.ஐ.டி. பொறுப்பேற்க வேண்டுமென கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனான இந்த நேர்காணல் 2009 ஒகஸ்ட் 19 ஆம் திகதி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது. அந்த நேர்காணலின் முழுமையான மூல ஒளிப்பதிவினை பெற்றுக் கொள்ள சி.ஐ.டிக்கு பொறுப்பான நிஷாந்த டி சில்வா கல்கிசை நீதிமன்றத்துக்கு விண்ணப்பமொன்றை செய்திருந்தார். 2007 ஒகஸ்டில், லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு 16 மாதங்களுக்கு முன்னர் தெரண தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த மேற்படி நேர்காணலின் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஊடகவியலாளர்கள் தன்னைப் பற்றி ‘குப்பை’யாக விடயங்களை எழுதிவிட்டு காரை தனியாக ஓட்டிச் செல்கின்றனர் என்று கூறுவதுடன் வாகனமோட்டுவது போல் தனது கைகளால் சைகை காட்டியிருந்தார். நேர்காணலின் இப்பகுதி கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.

குற்றச் செயல் தொடர்பான விசாரணைகளுக்கு மேற்படி நேர்காணலின் முழுமையான ஒளிப்பதிவு தேவைப்படுவதாக சி.ஐ.டி.யினர் மேற்படி வழக்கின் இலக்கத்தை (B/92/2009) குறிப்பிட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது.

சி.ஐ.டி.யின் ‘B’ அறிக்கையின்படி இந்த நேர்காணலை ஊடகவியலாளர் டில்கா சமன்மலி தெரண தொலைக்காட்சிக்காக செய்திருந்தார்.

இந்த ஒளிப்பதிவை சி.ஐ.டி.யினரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கடந்த 07 ஆம் திகதி உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற உத்தரவு பற்றி தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரண தொலைக்காட்சியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

லசந்தவின் மரணம் இடம்பெற்ற வேளையில் அவரின் சண்டே லீடர் பத்திரிகை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் மான நஷ்ட வழக்கை எதிர்நோக்கியிருந்தது.

அதனையடுத்து அப்பத்திரிகை சர்ச்சைக்குரிய மிக் இராணுவ விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது. அந்த வழக்கில் சாட்சியமளிக்கவிருந்த நிலையிலேயே லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கின் விசாரணைகள் 2015 இல் சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்பட்டன.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு 08 மாதங்களுக்கு முன்னர் கொம்பனித் தெருவில் உள்ள திரிப்போலி இராணுவ முகாமில் இயங்கி வந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கீத் நொயார் என்ற மற்றொரு ஊடகவியலாளரை கடத்திச் சென்று தாக்கியதாக சி.ஐ.டியினருக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன. மேற்படி இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சி.ஐ.டி. அதிகாரிகள் கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

லசந்த விக்ரமதுங்க கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த பத்தாண்டு காலத்தில் கொல்லப்பட்ட சமயம் அவரது காரில் இருந்ததாக கூறப்படும் குறிப்பு புத்தகத்தில் முக்கிய சான்றுகள் இருந்ததாக நம்பப்படுகிறது.

ஆனால் அந்த குறிப்பு புத்தகம் காணாமற் போயிருந்தது. ஆனால் இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் லசந்த விக்ரமதுங்கவின் மரண விசாரணை அறிக்கையில் சூட்டுக் காயம், வெற்றுத் தோட்டா துப்பாக்கி சூட்டின் துகள் போன்ற அடையாளங்கள் எதுவும் இருக்கவில்லை.

லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு நடத்தப்பட்ட இரண்டாவது மரண விசாரணையில் அவர் கொலைகாரர்களால் அடித்துக் கொன்றுள்ளமை தெரிய வந்தது. 2018 நவம்பர் 18 ஆம் திகதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சில்வாவை சி.ஐ.டி.யில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய முக்கிய வழக்குகள் பல பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்த நிலையில் மேற்படி இடமாற்றத்துக்கு எதிராக பொது மக்களின் எதிர்ப்பு பலமாக இருந்ததால் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடமாற்ற உத்தரவை மாற்றியமைத்தது. குறித்த இடமாற்றம் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த இடமாற்றம் கோதாபய ராஜபக்ஷவுக்கான பரிசு என்று லசந்த விக்ரமதுங்கவின் மகள் எழுதியிருந்த கடிதம் ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லசந்த விக்ரமதுங்க கொலையில் இராணுவம் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவதை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நிராகரித்ததுடன் அவ்வாறான சம்பவத்தில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு 10ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில் மேற்கூறிய நேர்காணல் தொடர்பான ஒளிப்பதிவை சி.ஐ.டியினர் பொறுப்பேற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நேர்காணல் தொடர்பாக தனது தந்தை 2007ம் ஆண்டிலேயே தன்னிடம் தொலைபேசியில் பேசிய போது ஒருநாள் கூறியிருந்ததாக லசந்தவின் மகனான அஹிம்சா விக்ரமதுங்க கூறுகிறார்.

எனது தந்தை எந்த நேர்காணல் பற்றி குறிப்படுகிறார் என்பதை அந்த தொலைபேசி அழைப்பில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அந்த நேர்காணலில் கோதாபய ராஜபக்ஷ இளஞ்சிகப்பு கோட்டுடன் வர்ணம் குறைந்த டையுடன் காணப்பட்டார். 2007ஒகஸ்ட் 19ம் திகதி இரவு 9.30மணிக்கு தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற மேற்படி ‘360’ என்ற நிகழ்ச்சியில் நேர்காணல் செய்த டில்கா சமன்மரியுடன் கோதாபய ராஜபக்ஷ ‘மிக் விவகாரம்’ பற்றி பேசியிருந்தார்.

அந்த நேர்காணலில் அரசாங்கம் 2006ல் மிக்- 27விமானத்தை கொள்வனவு செய்தமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிடுகிறார். மேற்படி கொடுக்கல் வாங்கல்கள் முறைப்படியே இடம்பெற்றன. எனினும் சண்டே டைம்ஸ் மற்றும் சண்டே லீடர் பத்திரிகைகளில் இவ்விடயம் ஆராய்ந்து படையினரை அதைரியப்படுத்தவும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வகையிலேயே எழுதப்பட்டிருந்தன என்று கோதாபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி ஒளிப்பதிவு அடங்கிய வீடியோவை பெயர் குறிப்பிட முடியாத ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் அவர் உண்மையான அந்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் தனது தந்தையின் கொலை தொடர்பான விசாரணைக்கு அது உதவக் கூடும் என்றும் குறிப்பிடுகிறார்.

Related posts