கனடாவில் சவுதிப் பெண் அடைக்கலம்

பெற்றோர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தப்பி வந்த சவுதி பெண் ரஹாப் மொகமது அல் குனான் கனடாவில் அடைக்கலம் ஆனார்.

கடந்த வாரம் ரஹாப் மொகமது அல் குனானுக்கு அடைக்கலம் அளிக்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தயாராக இருப்பதாக கூறிய நிலையில் சனிக்கிழமையன்று கனடா சென்றடைந்தார் ரஹாப்.

டோரோன்டோவில் விமான நிலையத்தில் ரஹாப்பை வரவேற்ற கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிரிஸ்டியா கூறும்போது, “இவர்தான் ரஹாப் கனடாவின் தைரியமான குடிமகள்” என்று தெரிவித்தார்.

ரஹாப்புக்கு அடைக்கலம் அளித்த கனடா அரசை சர்வதேசப் பெண்கள் நல அமைப்புகள் பாராட்டியுள்ளன.

யார் இந்த ரஹாப் மொகமது அல் குனான்?

ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை குனான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ”குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர்.

இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு கேட்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதனை ஏஎஃப்பி செய்தி நிறுவனமும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை அப்பெண்ணை திரும்ப அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில், ”புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts