சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 செப்டம்பர் 8-ம் தேதி, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். பழ.நெடுமாறன் தலைமையில் சென்னையில் நடந்த அந்த திருமணத்தில், திருமாவளவன், தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், தமிழருவி மணியன், மல்லை சத்யா, ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடந்த 11-ம் தேதி சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் நடேசன் பூங்கா அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சீமான் கொஞ்சி மகிழ்ந்தார்.

‘‘மகள்தான் பிறப்பாள் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்ப அதிர்ச்சியாக பையன் வந்து பிறந்திருக்கிறார். அதனால் பெயர் இன்னும் யோசிக்கவில்லை. என் நண்பரும் மருத்துவருமான கார்த்திக் குணசேகரனின் மனைவி மருத்துவர் மனுலட்சுமிதான் பிரசவம் பார்த்தார். ஒரு மாதம் கழித்து பெயர் சூட்டுவோம். பிறகு இளையான்குடிக்கும், காளையார்கோவிலுக்கும் இடையே முடிக்கரை காளிகோயிலில் மகனுக்கு முடியெடுப்போம். வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள், நண்பர்கள், தம்பிகள் அனைவருக்கும் நன்றி’’ என்று சீமான் கூறியுள்ளார்.

‘‘தை முதல் நாளையே நாம் தமிழர் கட்சியினர் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவது வழக்கம். அண்ணனுக்குப் புத்தாண்டுப் பரிசாக ஆண் குழந்தை பிறந்துள்ளது’’ என்றும், ‘‘புலிக்கு புலிக்குட்டி பிறந்திருக்கிறது’’ என்றும் சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சக அரசியல் தலைவர்கள் தொடங்கி செய்தியாளர்கள் வரை அனைவரையும் அய்யா, அப்பா, அண்ணன், அப்பத்தா, தம்பி என்று உறவு முறை சொல்லி அழைப்பது சீமானின் வழக்கம். அதையொட்டி, ‘அண்ணனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சித்தப்பன்கள் பெரும் மகிழ்ச்சியில்’ என்று செந்தன் குரு என்பவர் ‘ட்வீட்’ செய்துள்ளார்.

பொதுவாக சீமான் குடும்பத்தில் தாத்தா பெயரையே பேரனுக்கும் சூட்டுவது வழக்கம். தனது தந்தையின் இயற்பெயர் கிறிஸ்தவப் பெயர் என்பதால், அதைச் ‘செந்தமிழன்’ என்று பெயர் மாற்றினார் சீமான். அந்தப் பெயரையே தன் மகனுக்கும் சூட்டுவாரா, அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரைச் சூட்டுவாரா என்று விவாதம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் ‘நாம் தமிழர்’ கட்சியினர்.

Related posts