சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் பெருவிழா

டென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேரவையின் நிறுவனர் வேலணையூர் பொன்னண்ணா சென்ற ஆண்டு இறைபதம் அடைந்ததினால் அவரை மதிப்பளிக்கும் வகையில் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அரங்கு
எனப்பெயர் சூட்டப்பட்ட அரங்கினிலே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன.

திரு. திருமதி சங்கரலிங்கம் தம்பதியினர் மங்கல விளக்கேற்ற விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பேரவையின் தலைவர் திரு. செ.சோதிராஜா, திரு. சொ.பேரின்பநாயகம், திரு. வசந்தன் குருக்கள், திரு. கணேசக் குருக்கள் மற்றும் பேரவை நிர்வாகத்தினர் இணைந்து விளக்கேற்ற, பேரவையின் நந்திக் கொடியினை சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் நிறுவனர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் மகன் தாசன் பொன்னண்ணா ஏற்றி வைத்தார்.

செல்வி அஸ்வியா பிரபாகரனின் தேவாரத்துடன் கொடியேற்றல் நிறைவுற்றதும் பேரவைச் செயலாளர் பகீரதன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து காதுக்கினிய பண் இசையினை ஜெயசீலன் அருளானந்தஜோதி அவர்களின் சப்தஸ்வரா இசைக்குழுவினர் வழங்கிச் சிறப்பித்தனர். ஜெயக்குமார் துரை அவர்கள் தனக்கேயுரித்தான கம்பீரக் குரலால் சபையினைக் கட்டிப் போட்டார் என்றால் மிகையாகாது.

விழா அனைத்தையும் சிறுவர்களே பெரும்பான்மையாக நிகழ்த்திச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடனம், நாடகம், பாட்டு, பேச்சு என்று அரங்கினை அதிர வைத்தனர். கீதாலய நடனப்பள்ளியின் இரு சின்னஞ்சிறு மலர்கள் திருமதி சிவதர்சினி பாஸ்கரன் நெறியாள்கையில் நடனமாடிக் கண்களுக்கு விருந்திட்டனர்.

விவேக்கா கலாதரன் வயலின் மீட்ட, மகேஸ்கா கலாதரன் பாட, பாஸ்கரன் மிருதங்கம் வாசிக்க, நயினை ஆனந்தன் தபேலா வாசிக்கச் சங்கீத இசை அமுதமானது, தேன்வந்து பாயுதே காதினிலே என்ற பாரதியின் பாடல்வரிகளை நினைவிற்குக் கொண்டுவந்தது.

நிகழ்ச்சிகளை பாஸ்கரன் மற்றும் கௌசலா மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தனர். கவிஞர் வேலனையூர் பொன்னண்ணா அரங்கு என்ற வார்த்தையினை இவர்களிருவரும் அவ்வப்போது பயன்படுத்தியமை இப்பேரவையானது அவர் மீது வைத்த பற்றினையும் அன்பினையும் பறைசாற்றுவதாகவே கொள்ளப்படத்தக்கது.

இப் பெருவிழாவில் சைவத்தமிழ்ப் பன்பாட்டுப் பேரவையின் நீண்டகால உறுப்பினராக விளங்கிவரும் மதிப்புக்குரிய திரு. செல்வக்கதிரமலை அவர்களுக்குச் சைவச் சான்றோன் என்னும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஒளவைப் பிரசாதம் என்னும் நாடகம் பல சிறுவர்களை ஒன்றினைத்த சற்று நீண்ட நாடகமாக அமைந்திருந்தாலும் அனைவரும் சிறப்பாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

ஒளவைப் பாட்டியாக நடித்த சிறுமியின் சொல்லாடல் பொன்னண்ணா அரங்கை அதிரவைத்தது.

இதில் வரும் விருந்தோம்பல் காட்சியும் ஒளவையின் பாடலும் பழைய இலக்கியரசனையை மீட்டிட வைத்தது

இருந்துமுகம் திருத்தி ஈரொடுபேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப – வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.

என்னும் பாடல்வரிகள் அச்சிறுமியின் அச்சரம் பிசகாத உச்சரிப்போடு காற்றிற் தவழ்ந்து வீரநடை போட்டது. பரடேசியா கவின்கலை அமைப்பின் நெறியாளர் திருமதி சிவகலை தில்லைநாதன் இந்நாடகத்தை வடிவமைத்துச் சிறப்பாக அரங்கேற்றினார்.

கணேச நாட்டியஷேஷ்திரப் பள்ளி ஆசிரியை திருமதி சசிதேவி அவர்களின் மாணவிகளின் சிவன் பார்வதி நடனம் மீண்டும் பொன்னண்ணா அரங்கை அதிரவைத்தது.

சகோதரிகள் டிலக்ஷா தேவராஜா, யானுஷா தேவராஜா இணைந்தளித்த நாட்டிய நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக அமைந்தது. மேலும் திருமதி துவாரகா செந்தூரனின் இசை நிகழ்வில் ஆறு அகவையுடைய இரு மழழைகள் பாடிச் சபையோரை ஆச்சரியப் படுத்தினார்கள்.

திரு. பேரின்பநாயகம் சொக்கலிங்கம் அவர்கள் ஆன்மிக உரையார்றினார், அவரின் உரையில் கணவனை இழந்த பெண்ணின் தாலி அகற்றப்படுவது பற்றியும் குங்குமம் அழிக்கப்படுவது ஏன் என்பது பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.

மேலும் குங்குமத்தின் மகிமையினை விஞ்ஞான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து பரடேசியா சைவத்தமிழ்ப் பேரவைப் பள்ளி மாணவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து இலண்டன் மாநகரிலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் சிவஸ்ரீ வசந்தன் குருக்கள் சிறப்புரையாற்றினார். விகடமான பேச்சோடு சமயப் பண்பாட்டுக்
கூறினை மாணிக்கவாசகர் திருவாசகப் பாடலினை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டிச் சிறப்பாக உரயாற்றினார்.

கிறின்ஸ்ரட் நகர மாணவிகளின் வேப்பிலைக்காறி என்னும் கரகாட்டம் ஜெயலட்சுமி ஜெயக்குமார் அவர்களின் நெறியாள்கையில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து மறைந்த பொன்னண்ணா அவர்கள் நினைவுகளைச் சுமந்து, கவிஞர் வ.க. பரமநாதன் மற்றும் கவிஞர் சோதிராஜா செல்லத்துரை கவிதை மழை பொழிந்தனர்.

ஆண்டு தோறும் பேரவையினரால் நடாத்தப்படும் பன்ணிச்சைப் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கும் மற்றும் வெற்றியாளர்களுக்;கும் சான்றிதழும் பரிசுக் கேடயமும் மற்றும்
தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதி பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் அழகு தமிழில் பேச்சுகள் இடம் பெற்றன.

முழுக்க முழுக்கச் சிறார்களின் மொழியாற்றலையும் சைவப் பண்பாட்டில் பிள்ளைகள் தாமாகக் காட்டும் ஆர்வத்தையும் இவ்விழா மூலம் சைவத்தமிழ்ப்
பண்பாட்டுப் பேரவை சாதித்துக் காட்டியுள்ளது.

வாழ்க சைவமும் தமிழும்.

தொகுப்பு: வ.க.பரமநாதன்

Related posts