இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

வன்னியில் இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

இரசாயன ஆயுதங்கள் சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விடயங்கள் ஒரு அமைச்சிலிருந்து இன்னொரு அமைச்சுக்கு மாற்றப்படுவது தொடர்பில் எமக்கு அக்கறை கிடையாது. எம்மைப் பொறுத்தவரையில் வன்னி இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டமைக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமாகும்.

சர்வதேச சமவாய சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை ஆராயும் பொறிமுறை ஏதாவது இந்த அரசிடம் உள்ளதா? இன விடுதலைக்கான எமது போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக்கி இந்த அரசு அழித்துவிட்டது. தற்போது எமது மக்களின் அகிம்சாவழி போராட்டம் தொடர்பிலும் இந்த அரசு கரிசனை காட்டாதுள்ளது. எனவே தமிழர்கள் சர்வதேச ரீதியில் நீதியைப் பெற இந்த அரசு சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Related posts