தமிழன் கதாநாயகனாக இல்லாத இரண்டு படங்களுக்காக மோதல்..!

தமிழன் ஒருவன் கதாநாயகனாக நடிக்காத இரண்டு படங்கள் வருகின்றன..

இந்த படங்களுக்காக தமிழர் திருநாளில் தமிழர்கள் மோதலாம்..

உன்னை என்ன செய்வது தமிழினமே…?

ரஜினியின் பேட்ட வெல்லுமா அஜித்தின் விஸ்வாசம் வெல்லுமா என்று தமிழகத்தில் தேர்தல் நடப்பது போல அதிமுகவா திமுகவா என்பது போல புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.

ஒரு தமிழன் நடித்த படத்திற்கு மோதுகிறார்களா என்றால் அதுதான் இல்லை.. ஆம் இதுதான் வள்ளுவர் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை.

இந்த மோதல்களின் பின்னணி என்ன..?

பாமர மக்களின் பணத்தை பறிக்க இந்த சூதாட்டம் ஆரம்பித்திருக்கிறது என்றும் சொல்லக்கூடியளவுக்கு கூத்துக்கள் உள்ளன.

இரண்டு படங்களும் தரமுள்ளவையா… பொங்கல் தினத்தில் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படங்களா என்ற கோணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுக்காது ரஜினியா இல்லை அஜித்தா என்றுதான் விமர்சனம் கிளம்பியுள்ளது.

இதனால் பொங்கலன்று ஒரு நல்ல படத்தை பார்க்கிறோம் என்று ரசிகன் நினைக்க முடியாமல் இரண்டும் மோசமான படங்களாக இருந்தாலும் இரண்டையும் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக படங்கள் வெளியாகும் முதல் மூன்று நாட்களுக்குள் பணம் கைமாறிவிடும், அதன் பின்னர்தான் பாமர ரசிகர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர முடியும்.

இப்படி ஏமாற்றங்கள் தொடர்கின்றன..

இரண்டு படங்களின் ரெய்லர்களும் மில்லியன்கணக்கில் ரசிகர்கள் பார்த்தாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ரெய்லர்களுமே மிக மோசமான கட்டிங்குகளாக உள்ளதாக பலர் கூறுகிறார்கள். இருவரும் நரைத்த தாடிகள், தலைகளுடன், டுயட் பாடுகிறார்கள். ஆட்களை அடித்து துவைப்பது போல லாஜிக் இல்லாத நம்பமுடியாத சண்டைக்காட்சிகளை வைத்துள்ளதை ரெய்லர்கள் காட்டுகின்றன.

காதல் என்ற அழகிய காட்சியை இப்படி மாற்றி இளைஞர்கள் தலைக்கு நரை அடித்து அலைகிறார்கள் இவர்களால்.

முன்னர் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் எங்கவீட்டு பிள்ளை சிவாஜியின் புதிய பறவை இரண்டும் போட்டிக்கு வந்தன. ஆனால் அவர்கள் படங்களின் தரங்களை வைத்தே மோதினார்கள்.

ஆனால் இங்கோ நடக்கும் மோதல்கள் தரமற்ற இரண்டு படங்களின் உண்மைத்தன்மையை மறைக்க நடக்கும் மோதல்கள் போல ஒரு “செற்றப்” தெரிகிறது.

உண்மையில் ரஜினி – அஜித் இருவருடைய காலமும் இறங்கு முகத்தில் உள்ளன. 543 கோடியை கொட்டியும் 2.0 வில் ரஜினியால் சாதிக்க முடியவில்லை. பல நாடுகளில் நஷ்டம் என்கிறார்கள்.

அஜித் படங்களும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை. ஆகவேதான் வழியற்ற நிலையில் தேவையற்ற போட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இல்லாவிட்டால் இரண்டு படங்களையும் முன் பின்னாக போட்டிருப்பார்கள் அல்லவா..?

ஒரு பெரிய கதாநாயகனின் படம் வந்தால் இன்னொரு பெரிய கதாநாயகன் படம் வரக்கூடாதென்று கூறிய தயாரிப்பாளர் சங்கம் இப்போது மோதலில் கிடக்கிறது. அந்த மோதலும் இதற்கான செயற்கை மோதலாக இருக்கலாம் என்பது ஒரு சந்தேகம்.

சிறிய படங்களுக்கு பாதுகாப்பளிப்போம் என்ற தயாரிப்பாளர் சங்க குரல்கள் எங்கே..? எல்லாம் முனை மழுங்கிவிட்டன.

இப்படித்தான் ஒரு தடவை எம்.ஜி.ஆரா – சிவாஜியா என்று போட்டியை ஆரம்பிக்க அமைதியாக வந்த சிறீதரின் கல்யாணப்பரிசு இருவர் படங்களையும் குப்புற விழ செய்து வெள்ளிவிழா சாதனை படைத்தது.

அதுபோல பொங்கல் வெற்றி ரஜினியின் பேட்ட க்கோ , அஜித்தின் விஸ்வாசத்திற்கோ அல்ல.. வேறு ஒரு சிறிய படத்திற்கு போனாலும் ஆச்சரியமில்லை.

யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி என்ற இரு பத்தரிகைகள் வந்தன. இரண்டிலும் ஒரு நடிகரை மற்ற பத்திரிகை தாக்கியது போல செய்தி வரும். இதனால் பஸ் ஸ்ராண்டில் பேப்பர்கள் பறக்கும்.

ஒரு நாள் இரகசியம் தெரிந்தது..

இரண்டு பேப்பர்களையும் வெளியிடுவது ஒருவர்தான் என்ற உண்மை. அதே கூத்துத்தான் இப்போதும் நடக்கிறது. பின்னால் இருக்கும் சூத்திரதாரி ஒருவர்தான்.

ரஜினியும் அஜித்தும் போட வேண்டிய சரக்கை போட்டுவிட்டு தமிழ் நாட்டு தமிழரை போல ஏமாளிகள் உலகில் யார் உள்ளார்கள் என்று என்று சிரிப்பார்களோ யார் அறிவார்.

தமிழகம் அல்லாத வேறொரு மாநிலத்தில்..

தமது மாநிலம் இல்லாத இரண்டு நடிகர்கள் நடித்த படங்களுக்காக..

அதுவும் அந்த மாநில கலாச்சார பண்டிகைக் காலத்தில் இப்படி அந்த மாநில மக்கள் மோதுவார்களா..?

சரி ஒரு தமிழனின் படத்திற்கு தமிழர் திருநாளாம் பொங்கலில் தமிழகத்தில் இடம் இருக்கிறதா..?

இந்த இலட்சணத்தில் பொங்கல் தமிழர் புத்தாண்டா இல்லையா என்ற பட்டிமன்றம் வேறு..?

பொங்கலோ பொங்கல்..!

தமிழக தமிழர் இந்த உண்மைகளை புரிந்து எப்போது திருந்துவார்கள்..?

அலைகள் 09.01.2019

Related posts