‘விஸ்வாசம்’ தான் பெஸ்ட் அஜித்

விஸ்வாசம்’ பார்த்துவிட்டு, இது தான் நமது இணைப்பில் பெஸ்ட் என்று அஜித் வாழ்த்தியது குறித்து இயக்குநர் சிவா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், ஜனவரி 10-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இதற்கான திரையரங்குகள் ஒப்பந்தம் முடிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்னதாக ‘விஸ்வாசம்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அஜித்துக்கு திரையிட்டு காட்டியுள்ளார் இயக்குநர் சிவா. படம் முடிவடைந்தவுடன் சிவாவை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் அஜித்.

இது குறித்து சிவா அளித்த பேட்டியில், “நாம் இணைந்து 4 படங்கள் பண்ணியிருக்கோம். அதில் ‘விஸ்வாசம்’ தான் பெஸ்ட் என்று அஜித் சார் கூறினார். அவர் கூறும் போது, படக்குழுவினர் என்னோடு இருந்தனர். மேலும், இப்படத்தின் கதையைக் கூறும் போதே அவ்வளவு சிரித்து சிரித்து ரசித்துக் கேட்டார். அந்த அளவுக்கு மிகவும் அலப்பறையான அஜித்தை இதில் காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.

‘விஸ்வாசம்’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டதால், தற்போது ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Related posts