அமெரிக்கா ரஸ்யா உளவுப் பிரிவு மோதல் உச்சக்கட்டத்தில்..

அமெரிக்காவுக்கும் சோவியத் ரஸ்யாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்ற காலத்தைப் போல உளவறிய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன.

ரஸ்யாவின் பெண்மணியான மரியா புற்றினா என்ற பெண்மணி அமெரிக்காவில் உளவு பார்த்தார். இதன் பொருட்டு பல தரப்பினருடனும் தொடர்பு வைத்திருந்தார், சிறப்பாக அமெரிக்க றைபிள் குழுவுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்துள்ளார்.

இவர் உறங்கும் உளவாளி என்று வர்ணிக்கப்பட்டு கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் குற்றவாளியாகக் காணப்பட்டு, அமெரிக்காவில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்பெண்மணியிடம் அமெரிக்க விசாரணைப் பிரிவினர் ஏராளம் தகவல்களை கறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவரை மேலும் மேலும் சிறையில் வைத்திருக்க முடியாது ரஸ்யாவுக்கு வரவழைக்க வேண்டுமென அந்த நாடு பதட்டமடைந்துள்ளது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவை சேர்ந்த போவுல் வெக்லன் என்பவரை ரஸ்யர்கள் கைது செய்து உளவாளி என்று கூறியிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 28ம் திகதி கைதான இவருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் உளவாளி அல்ல குடும்பத்தின் திருமண விழா ஒன்றிற்காக மொஸ்க்கோ போனவரை தேவையில்லாமல் கைது செய்துள்ளார்கள் என்று அவர் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

மேலும் கைதானவர் அமெரிக்கரும் அல்ல பிரிட்டன், அயர்லாந்து, கனடா நாடுகளின் கடவுச்சீட்டுக்களையே வைத்துள்ளார். கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிகிறார், ஆனால் ஈராக்கில் அமெரிக்கப்படைகளுக்காக பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது.

ரஸ்ய பெண்மணியை அமெரிக்கா விடுதலை செய்தால் பதிலுக்கு அமெரிக்க படை வீரர் விடுதலையாவார். இதற்கான கைதிகள் பரிமாற்றத்திற்காக ரஸ்யா காத்துள்ளது.

இப்போது பேரம் பேசல் ஆரம்பித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைதான அமெரிக்கருக்கும் உளவறிதலுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது, என்று ஓய்வு பெற்ற சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர் போறின் பொலிசி என்ற சஞ்சிகைக்கு பேட்டியளித்துள்ளார்.

ஆனால் கைதான அமெரிக்கரிடம் ரஸ்ய உளவுப்பிரிவினரின் பெயர் பட்டியல் அடங்கிய காட்டிஸ்க் ஒன்று இருந்தாக கூறுகிறார்கள், ரஸ்ய உளவுப்பிரிவினர். ஆனால் நீதிமன்றில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.

இந்த இரண்டு கைதுகளும் முற்றிலும் தொடர்பற்றவை. ஒன்று மொட்டந்தலை மற்றது முழந்தாள் எப்படியோ முடிச்சுப் போட்டு காரியத்தை முடித்துவிட முயல்கிறார்கள்.

அலைகள் 06.01.2019 ஞாயிறு.

Related posts