இளையராஜா பேசியதற்கு கங்கை அமரன் பதிலளித்துள்ளார்.

இளையராஜா கல்லூரி விழாவில் பேசியதற்கு கங்கை அமரன் ட்விட்டரில் பதிவிட்டு பதிலளித்துள்ளார்.

இளையராஜாவின் பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. அவருடைய 75வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.

அவரும் அந்த விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி, பாடி, இசையமைத்து, தன் அனுபவங்களைச் சொல்லி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தன் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டு வந்த இளையராஜா, இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று தெரிவித்தார்.

இதற்கு இயக்குநரும் இசையமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கைஅமரன், தன் டிவிட்டர் பக்கத்தில் பதிலாகப் பதிவிட்டுள்ளார்.

இளையராஜா தெரிவித்தத்தை அப்படியே பதிவிட்டுள்ள கங்கை அமரன், தன்னுடைய பதிவாக, ’மன்னிக்கவும், நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வரமுடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போதுள்ள இசையானது, கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. இளையராஜா சொல்லுவது உண்மைதான் என்று கங்கை அமரனின் ட்விட்டருக்கு கமெண்ட் போட்டிருக்கிறார்கள் பலரும்.

அதேசமயம், இளையராஜா சொன்னதை அமோதித்து ட்வீட் போட்டிருக்கிறாரா, அல்லது இளையராஜா சொன்னதை கிண்டலடித்து பதிவிட்டிருக்கிறாரா கங்கை அமரன் என்று பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

Related posts