12 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள விசித்திர கிரகம்

நமது பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டது. பல்வேறு விடைகளுக்காக பிரபஞ்சத்தை அதிகமாக தேடும் போதும், அதிகமாக அதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதும், நமக்கு உண்மையில் விடயங்கள் எவ்வளவு குறைவாக தெரிந்துள்ளன என்பதை அறிந்து கொள்வோம். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம், இந்த பரந்த விண்வெளியில் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்பதைக் காண்பிக்கிறது.

விண்வெளியில் உள்ளவை நம் புரிதலை முழுவதுமாக மாற்றக் கூட வாய்ப்புகள் உள்ளன. முன்பு சாத்தியமில்லை என நினைத்த விடயங்கள் தற்போது அதன் உண்மையான விளக்கத்தை வழங்கி சாத்தியமே என காண்பித்துள்ளன.

தற்போது வானியலாளர்கள், நம்மால் இதுவரை இருக்கும் என நினைத்துக் கூட பார்த்திருக்காத தூரத்து அற்புத உலகை, அதுவும் பலூன் வடிவ கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். நெப்டியூன் அளவிற்கு உள்ள இந்தக் கிரகம் பூமியிலிருந்து சுமார் 12 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

ஜெனிவா பல்கலைகழகத்தின் அறிவியலாளர்கள் தலைமையிலான சர்வதேச ஆய்வுக்குழு இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டுள்ளதால், இந்த தொலைதூர கிரகமானது பலூன் வடிவத்தில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்.

எக்ஸ்டர்ஸ் இயற்பியல் மற்றும் வானியல் துறை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ​ெடாக்டர ஜெஸிகா ஸ்பேக் இந்த விசித்திர கிரகத்தைப் பற்றிக் கூறும் போது, ” இது உண்மையிலேயே ஆச்சரியமளிக்கும் கண்டுபிடிப்பு. அதிலும் குறிப்பாக வெளிக்கோள்களின் வளிமண்டத்தில் ஹீலியம் கண்டறியப்படுவது இதுதான் முதல்முறை” எனத் தெரிவித்தார்.

சிக்னஸ் தொகுதி மண்டலத்தில் இருக்கும் இந்த விசித்திர கிரகமானது HAT-P-11b என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தக் கிரகத்தின் பகலாக இருக்கும் பகுதியில் இருந்து இரவாக இருக்கும் பகுதிக்கு ஹீலியம் வாயு வேகத்தில் வீசிகிறது. மிகவும் மெலிதான வாயு என்பதால், கிரகத்தின் ஈர்ப்பில் இருந்து எளிதில் தப்பி, அதனைச்சுற்றி மேகமாக உருவாகிறது என்கிறார் விஞ்ஞானி வின்சென்ட்.

இதன் காரணமாகவே இந்தக் கிரகம் விசித்திரமான வடிவத்தை வழங்குகிறது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவை விட, HAT-P-11b யின் வளிமண்டலம் அதன் மைய நட்சத்திரத்தில் இருந்து 20 மடங்கு அருகில் உள்ளது.

Related posts