அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.01.2019 புதன்கிழமை

01. வெப்ஸ்டர் என்ற அகராதி கூறும்போது : “திரும்பத் திரும்ப மேற்கொள்வதால்தான் பழக்கம் உருவாகிறது என்கிறது” ஒரு பழக்கம் நிலைக்கவும் அதுவே காரணமாகும்.

02. ஆசை நிறைவேறுவதற்கான நடைமுறை மார்க்கம் ஒன்று உருவாகும் வரைக்கும் வரை அந்த ஆசை இருந்துகொண்டிருக்க வேண்டும்.

03. அந்த ஆசை மீது உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். அது நிறைவேற முன்னரே நிறைவேறிவிட்டதாக உறுதியாகவும், பூரணமாகவும் திரும்ப திரும்ப நம்ப வேண்டும்.

04. நேர்மறையான பழக்கவழக்கங்களை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளும்போது உங்களிடம் மனக்கட்டுப்பாடு, உறுதி, தைரியம், நம்பிக்கை போன்றன உருவாகின்றன.

05. நீங்களாகவே சுயகட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வது உயர்ந்த மேன்மையான பண்பாக அமையும். அவற்றை உருவாக்கிக் கொள்ளும்போது அவை உங்கள் இலக்கை எட்டித்தொடும் மன உறுதியை தரும். இவை எல்லாம் மனதில் இருந்தே பிறக்கின்றன.

06. திரும்பத்திரும்ப இவற்றை செய்யும்போது அவை பிரபஞ்ச இயக்க விதிமுறையாக மாறிவிடும். அதன் மூலமாக பிரபஞ்ச இயக்கத்தின் துணையை பெற முடியும். அதன் பின் அவை யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே செயற்படும்.

07. பழக்கம் என்ற சொல் தனிமனித சாதனையுடன் தொடர்புடைய முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார, சமூக, தொழில், ஆன்மீக நிலைகளுக்கும் இதுவே ஆதாரமாகும்.

08. நாம் எந்தமாதிரியான பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமோ அதற்கு ஏற்பவே நமது சமூக அந்தஸ்த்தும் அமைகிறது.

09. அதுபோல நமது தவறான பழக்க வழக்கங்களை மாற்றியமைத்து, முறையாக வடிவமைத்துக்கொண்டால் நாம் எந்த நிலையில் இருந்தாலும் கண்டிப்பாகவே சாதித்துவிட முடியும்.

10. உங்கள் ஆசைகளை சிறுமைப்படுத்த முயலும் மனிதர்களில் இருந்து விலகிவிடுங்கள். அற்ப குணமுள்ளோர் இவ்வாறுதான் நடந்து கொள்வர். ஆனால் பெரிய மனிதர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா..? உங்களை சிறுமைப்படுத்தமாட்டார்கள். ” நீங்களும் பெரிய மனிதர்கள் ஆகலாம் ” என்றுதான் நம்பிக்கையூட்டுவார்கள்.

11. வறுமை, பற்றாக்குறை போன்றவற்றை வெற்றி கொள்ள தோல்வி தரும் பழக்கங்களில் திடீர் மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல புதிய கோட்பாடுகளை வெற்றிகரமாகத் தொடரவும் வேண்டும்.

12. வாழ்வை இரண்டு விதமாக அமைத்துக்கொள்ளலாம், ஒன்று வாழ்வை சுமந்து செல்லும் குதிரையாக நாம் இருக்கலாம் இரண்டு நம்மை சுமந்து செல்லும் குதிரையாக வாழ்வை மாற்றலாம். எதுவென்று நீங்களே தீர்மானிக்க வேண்டும். ” வாழ்க்கையின் பாரம் குறையுமா ” என்று கனைப்பவன் குதிரையாக இருக்கிறான்.

13. நீங்கள் குதிரை வீரனாக இருக்காவிட்டால் சுமக்கும் குதிரையாகத்தான் மாற வேண்டி வரும். வாழ்க்கை என்பது பாரபட்சமற்றது, அது குதிரையாகவும், குதிரை வீரனாகவும் ஓடிக்கொண்டிருக்கும். அது எப்போதுமே ஓரிடத்தில் நிற்காது. ஏனென்றால் ஓடுவதுதான் அதன் வேலை.

14. தற்பொருமையும் பழக்கமும் பிரிக்க முடியாத விடயங்கள். ஈகோ என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து தோன்றியது. இதற்கு ” நான் ” என்ற அர்த்தம். ஆணவத்தின் காரணமாகவே தற்பெருமை ஏற்படுகிறது. மனிதரின் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பது தற்பெருமைதான். நான் என்ற ஆணவம் செயலாக மாறியதுதான் இந்த அழகிய பூமி.. அதில் இருந்து கொண்டு ஆணவத்தை அழிக்கப்போகிறேன் என்கிறான் துறவி. ஆனால் அவன் குடிக்கும் தண்ணீர்கூட ஆணவத்தில்தான் உருவானது.

15. தற்பெருமை என்பது சிந்திக்கும் பழக்கத்தின் மொத்த விளைவு. தற்பெருமை உள்ளவர் அதை பிறரிடம் வெளிப்படுத்தி எதிர்ப்பை சம்பாதிக்கிறார். எப்போதுமே தற்பெருமையை ஆக்கபூர்வமான காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும். கர்ணன் தன் தற்பெருமையை தான் கொடுத்த கொடை மூலம் விளங்கப்படுத்தினான். கடவுளையே தன் முன் கையேந்த லைத்தது அவன் தற்பெருமையின் செயல் வடிவம்.

16. தற்பெருமை உள்ள மனிதனின் வாசகம் ” சொல்லாதே செய்து காட்டு ” என்பதாக இருக்க வேண்டும். தற்பெருமையை சரியாக பயன்படுத்தத் தெரியாத காரணத்தினால்தான் உலகத்தின் அனைத்து போர்களுமே ஏற்பட்டன. ( இந்தியாவிலும், இலங்கையிலும் இந்தத் தவறுகள் இன்றும் தொடர்கின்றன. பாடசாலை பாடப்புத்தகங்கள் இதை சீர்செய்ய தவறிவிட்டன.)

17. நீங்கள் பெருமையுள்ள மனிதனாக இருந்தால் அதற்குரிய காரியங்களை செய்யுங்கள். இன்றில்லாவிடினும் என்றோ ஒரு நாள் மற்றவர்கள் உங்களை பெருமைப்படுத்துவர்.

18. நீங்கள் உங்கள் மீதே மரியாதை கொள்ளாதவரை, உங்கள் நேரம் குறித்து அக்கறை காட்டமாட்டீர்கள். நேரத்தின் மீது அக்கறை இல்லாதபோது உங்களால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. சாதிக்க தெரியாத மனிதர்கள் வீண் பொழுது கழிக்கும் கூட்டத்தில் எப்போதும் கரைந்து போவார்கள்.

19. மக்கள் தங்களுக்கு இலாபம் இல்லாமல் எதையும் ஆதரிக்கமாட்டார்கள். உங்களால் அவர்களுக்கு ஏதாவது ஆக வேண்டும் என்றாலே ஆதரிக்க வருவார்கள். லாட்டரி விழும் என்ற போலி வாக்குறுதியை நம்பி கோடி கோடியாக கொட்டும் மனிதர்களின் மனதை உதாரணமாக சொல்லலாம். உண்டியலில் பணத்தை வீசும் மனிதன் சொர்க்கத்தில் இடம் கேட்கிறான். தற்பெருமையை செயலாக்க வேண்டுமா? அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டும்.

20. தெளிவில்லாத மேம்போக்கான நோக்கங்களை வைத்துக் கொண்டு நிரந்தரமான மனித இயல்புகளை பேண முடியாது. குறிக்கோள் எதுவும் இல்லாவிட்டாலும் உறவு சாத்தியமில்லை. தோல்வி இதை உறுதிப்படுத்துகிறது.

21. நீங்கள் உங்கள் ஆர்வத்தையோ மற்றவர்களுடன் உள்ள பழக்கத்தையோ கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் அது தாழ்வு மனப்பான்மையாக மாறிவிடும். அதன் பின் குறிக்கோளை அடைவது சிரமமாகிவிடும்.

22. உங்களுக்கு எதிர்மறையாக செயற்படும் மனிதர்களுக்கிடையில் கனமான ஒரு கோடு போடுங்கள். பழைய நட்பு எப்படியிருந்தாலும் அதுபற்றி கவலைப்படாதீர்கள். இந்த விடயத்தில் அனுதாபம் காட்டக்கூடாது.

23. கடந்துபோன விரும்பத்தகாத விடயங்களால் உயிர்துடிப்புள்ள கற்பனை ஒருபோதும் உருவாக முடியாது. இன்றும் எட்டப்படாதிருக்கும் குறிக்கோள் மீது ஆசையும் நம்பிக்கையும் கொள்ளும்போதுதான் துடிப்பான தற்பெருமை உருவாகும்.

24. எண்ணங்களில் இருந்துதான் தற்பெருமையின் வெற்றி தோல்வி தீர்மானமாகிறது. திட்டம் பூர்த்தியான பின் சிறிய விடயங்கள் விடுபட்டுப் போனால் எண்ணம் அதை சீரமைப்பு செய்துவிடும்.

25. உங்கள் தற்பெருமையை வெளிப்படுத்தும் வெளிப்புற சக்திகளை சுற்றவர வைத்திருங்கள். உதாரணம் நீங்கள் ஒரு நூலை எழுத விரும்பினால் அது போன்ற நூல்களை எழுதிய எழுத்தாளர் படங்களை அருகே வைத்திருங்கள்.

அலைகள் 02.01.2019
பழமொழிகள் தொடர்ந்தும் வரும்.

Related posts