2018ம் ஆண்டில் நடந்தது என்ன உலகை சுற்றிய பார்வை

ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் வரும் 18 வது ஆண்டு அந்த நூற்றாண்டின் வரலாற்றின் மிக முக்கியமான ஆண்டு என்று கூறுவார்கள். எப்படி 18 வயதில் இருந்து விடைபெறும் ஓர் இளைஞன் முழுமை மனிதனாகிறானோ, அது போல ஒவ்வொரு நூற்றாண்டிலும் பூமியும் முழுமை மனிதனாகும் நிறைவு ஆண்டு 18 எனலாம்.

சென்ற நூற்றாண்டின் முதல் 18 வருடங்களுடன் ஒப்பிட்டால் இந்த நூற்றாண்டின் முதல் 18 வருடங்களும் அசுர வேகமானவை என்றே கூற வேண்டும்.

கிறிஸ்துவிற்கு பின் வந்த 19 நூற்றாண்டுகளிலும் உலகம் அடைந்த முன்னேற்றத்தைவிட பல மடங்கு அதிக முன்னேற்றத்தை அடைந்த நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு என்றார்கள். ஆனால் கடந்த போன 20ம் நூற்றாண்டுடன் ஒப்பிட்டால், கடந்த 18 வருடங்களில் உலகம் அடைந்த முன்னேற்றம் அபாரமானது. இருபதாம் நூற்றாண்டில் எவருமே முன்னெதிர்வு கூறாத அதிசயமானது.

நாம் வாயால் கதைத்துக் கொண்டிருக்கிறோம் அதை கூகுள் குறோம் தமிழில் படபடவென தட்டச்சு செய்து கொண்டிருக்கிறது. இதை நாம் சென்ற நூற்றாண்டில் கற்பனை செய்திருக்க முடியாது.

அதே கூகுள் குறோம் நமது வீட்டின் மேசையில் இருக்கிறது. உலகத்தின் உயர்ந்த மலை எது.. ஆழமான கடல் எது.. என்று கேட்கிறோம். ஒரே நொடியில் பதில் சொல்லிவிடுகிறது. நமக்கு விமான சீட்டு பதிவு செய்ய வேண்டுமா, உலகத்தின் எங்காவது ஒரு கோட்டலில் ரூம் போட வேண்டுமா.. வாயினால் உத்தரவிட்டாலே போதும் கூகுள் குறோம் செய்துவிடுகிறது.

மிகமிக சிறிய விலையில் இவற்றை இன்று நாம் கடைகளில் வாங்கலாம். குறோம் என்ற இந்த சிறு கருவியை அறிமுகம் செய்ய பின்னணியில் இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை என்ற தமிழர்தான்.

தமிழன் என்றால் கூலி என்று எழுதப்பட்ட ஆங்கில அகராதியை குப்பைத் தொட்டியில் வீசியது 2018ம் ஆண்டு. குறோம் என்றால் என்ன அது தமிழகத்தில் உள்ள பின்தங்கிய குறோம் பேட்டையின் பெயர்தான்.

இந்த ஆண்டு நவம்பர் வந்த போர்போஸ், புளும்போர்க் போன்ற உலகப்புகழ் பெற்ற ஏடுகளில் எல்லாம் தமிழன் முக்கிய இடம் பிடித்தான். எந்திரன் 2.0 ஐ தயாரித்த புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார வெற்றியை அவர்கள் அதிக முக்கியம் கொடுத்து எழுதியிருந்தார்கள்.

ஆசியாவிலேயே 600 கோடி இந்திய ரூபா பெறுமதியில் ஒரு தமிழ் திரைப்படத்தை புலம் பெயர்ந்த ஈழத் தமிழன் தயாரித்தான் என்ற செய்தி ஒட்டுமொத்த இந்திய உப கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

2009 ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற போர் முடிந்தவுடன், அத்தோடு ஈழத் தமிழன் சரித்திரமும் முடிந்ததென மதிப்பிட்டோர் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லிய ஆண்டும் கடந்து போன 2018ம் ஆண்டுதான்.

சுவிற்சலாந்து நாட்டில் ஐ.பி.சி நடத்தி முடித்த ஐ.பி.சி தமிழா நிகழ்ச்சி தமிழ் மக்களின் சிந்தனை பிரமாண்டமான அளவில் விரிவடைய ஆரம்பித்துவிட்டதைக் காட்டியது. இப்படி உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக தனிமனிதர்களாகவும், நிறுவனங்களாகவும் தமிழர்கள் பெற்ற வெற்றி சிகரம் தொட்டது இந்த ஆண்டில்தான். தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையின் உச்சங்களாக கருதிய இலக்குகளை எல்லாம் தாண்டி வெகு தொலைவிற்கு போய்விட்டதை இந்த ஆண்டு தமிழர்களுக்கே தெளிவாகக் காட்டியது.

தமிழர்கள் தமக்கொரு நாடு இல்லாமல் உலகத்தையே நாடாக பயன்படுத்தி அடித்த ரன்களின் அளவை நாடுள்ள இனங்கள் அடித்துள்ளனவா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். நாடு என்ற பெயரும் ஐ.நா சபையின் அங்கத்துவமும் நாடுகள் உள்ள இனங்களின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரும் தடையாகவே இருந்துள்ளன. காரணம் அவர்கள் சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்திற்குள் சிக்குண்டு, தமது நாட்டை முன்னேற்ற முடியாது தடுமாற ஆரம்பித்துள்ளனர்.

உதாரணமாக உலகத்தின் எந்தவொரு கொதி நிலை பிரச்சனைகளுக்கும் நாடுகளால் தீர்வு காணவே முடியவில்லை. காரணம் ஐ.நா சபையில் ஐந்து வல்லரசுகளுக்கு இருந்த வீட்டோ அதிகாரம் காரணமாக எந்த ஒரு அநீதியையும் உலக நாடுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இஸ்ரேலும், அமெரிக்காவும் எருசெலேத்தில் தூதராலயமும், தலைநகரும் அமைத்த போது உலக நாடுகள் எதிர்த்தாலும் ஐ.நாவால் எதுவும் செய்ய முடியவில்லை. உக்ரேனிய கடற்படை வீரர்கள் 25 பேரை கைது செய்து வைத்திருக்கிறது ரஸ்யா ஆனால் அவர்களை விடுவிக்க ஐரோப்பிய தலைவர்களால் இயலவில்லை.

சவுதி ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதராலயத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். இவருடைய மரணத்தின் சூத்திரதாரியாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகக் கூறினாலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகளால் இயலவில்லை.

மத்திய கிழக்கு ஏமன் நாட்டில் சவுதி தலைமையிலான நாடுகள் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலில் 10.000 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். பட்டினியில் நாடே அழிந்துவிட்டது, தடுக்க முடியவில்லை. எனவேதான் நாடில்லாத தமிழர்களை விட நாடுள்ள இனங்கள் சாதித்தது அதிகமெனக் கூறமுடியவில்லை. இந்த நூற்றாண்டு தமிழர் நூற்றாண்டாக புகழ் பெறப்போகிறது என்ற நம்பிக்கை விளக்குகள் எரியக் காண்கிறோம். உயிர்கொடுத்த தமிழ் மக்கள் ஏற்றிய உயிர் விளக்குகள் வீணாகப்போய்விடவில்லை. புதிய ஆண்டில் மேலும் சிறப்பாக பிரகாசிக்கப்போகிறது என்பதற்கு கடந்து போன 2018ம் ஆண்டே சாட்சியம்.

இதுபோல கடந்து போன 2018 ம் ஆண்டு மேலும் மூன்று முக்கிய செய்திகளை உலக அரங்கில் பதிவு செய்து சென்றுள்ளது.

முதலாவது யார் உலகத்தின் முதலாவது என்ற ஈகோ பிரச்சனையில் அமெரிக்கா, சீனா, ரஸ்யா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐந்து வீட்டோ வல்லரசுகளும் சிக்குப்பட்டுவிட்டன. விளைவு தெளிவான வர்த்தகப்போர் பிரகடனமாகியிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக வரி விதிக்க ஆரம்பித்துவிட்டன. இது ஏழை நாடுகளை காயடிக்க ஆரம்பித்திருக்கிறது. இது பணக்கார நாடுகளையும் சும்மா விட்டுவைக்கவில்லை.

உதாரணம், சவுதி அரேபியா தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் அமெரிக்காவின் காலடியில் வைத்து தனது இருத்தலை காப்பாற்ற முயன்றுள்ளது. அவ்வளவு பெருந்தொகை பணத்திற்கு ஆயுத விற்பனை கைச்சாத்தாகியிருக்கிறது.

நேட்டோவின் பணக்கார நாடுகளைக் கூட அமெரிக்கா விடவில்லை. எப்.35 போர் விமானங்களை வேண்ட வேண்டுமென கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதற்காக நோர்வே, கொலன்ட், டென்மார்க் நாடுகள் கொட்டியிருக்கும் பணத்தைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.

அது மட்டுமா ரஸ்யாவும் ஆயுத விற்பனையில் பிரிட்டனை முந்திச் சென்றுள்ளது. உலகத்தின் பொருளாதார உச்சத்தில் 12 வது இடத்தில்தான் ரஸ்யா இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூற, ரஸ்யாவோ தான் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிவிட்டதாக அறிவித்துள்ளது.

பிரிட்டன் மண்ணில் வைத்து ரஸ்ய, பிரிட்டன் உளவாளி சோர்ஜி ஸ்கிரிப்பாலுக்கும், அவர் மகளுக்கும் ரஸ்ய ஒற்றர்கள் பொலோனியம் விஷம் வைத்தாலும் பிரிட்டனால் எதுவும் செய்ய முடியவில்லை. தம்மை அழித்தால் உலகத்தையே அழிக்கக் கூடிய ஐந்து பெரும் அணுசக்தி ஏவுகணை கட்டமைவை ரஸ்யா உருவாக்கியிருக்கிறது. அதில் ஒன்று சாத்தான் இரண்டு ஆகும். இன்னொரு ஏவுகணை மணிக்கு 25.000 கி.மீ வேகத்தில் பறக்கும் இவைகளை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது ரஸ்யா.

சீனாவோ தானே சொந்தத் தொழில் நுட்பத்தில் விமானம்தாங்கிக் கப்பலை கட்டமைத்துள்ளது. அதுபோல இரண்டாம் உலக யுத்தத்தின் பின், ஜப்பானும் விமானம் தாங்கிக் கப்பல்களை இப்போது முதற்தடவையாக வாங்கியுள்ளது. மிகமிக மோசமான ஆயுதப்போட்டா போட்டி உலக அரங்கில் முன் எப்போதும் இல்லாதளவுக்கு தீவிரம் பெற்ற ஆண்டாக 2018ம் ஆண்டு இருக்கிறது. காரணம் ரஸ்யா, அமெரிக்கா செய்த நீண்ட தூர ஏவுகணை தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. ரஸ்யா வரம்புகளை மீறிவிட்டது.

வல்லரசுகள் ஒப்பந்தங்களை மதித்தொழுகாத ஆண்டாகவும் இந்த ஆண்டு இருக்கிறது. அமெரிக்கா பல ஒப்பந்தங்களை கிழித்து வீசி வெளியேறியுள்ளது. அதில் ஒன்று புவி வெப்பமாதலை தடுக்க வேண்டிய பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமாகும்.

விளைவு புவி வேகமாக வெப்பமாகிறது, காட்டுத்தீக்கு அமெரிக்காவே மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது. கடல் சூடேறி கொந்தளிப்பதால் சூறாவளிகள் என்றுமில்லாதளவுக்கு பெருகியுள்ளன. தரம் 5 கொண்ட மணிக்கு 290 கி.மீ வேகம் கொண்ட சூப்பர் சூறாவளிகள் பத்து இந்த ஆண்டு புவியை தாக்கி அழித்திருக்கிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றுவரை வீசும் சூப்பர் சூறாவளி இந்த ஆண்டு மிகவும் கூடுதலாக அடித்துள்ளது. இது கடந்த 21 வருடங்களில் இல்லாத சூறாவளிகளின் பாதிப்பாகும்.

மழை, வெள்ளம், மண் சரிவு, சுனாமி, வரட்சி, நில நடுக்கம், எரிமலைக்கக்குகை, ஏழ்மை காரணமாக மக்கள் நாடுகளை விட்டு தஞ்சம் கோரி புறப்படுகிறார்கள். அமெரிக்க மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் தஞ்சம் கோருவோர் குவிந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தடைச்சுவர் வைப்பதற்கு துடிக்கிறார். சிரியாவில் இருந்து இராணுவத்தை விலத்தும் அவர் தனது நாட்டுக்குள் வரும் அகதிகளை தடுக்க இராணுவத்தை அனுப்பியிருக்கிறார்.

ஐரோப்பாவை பொறுத்தவரை இரும்புப் பெண்ணான ஜேர்மனிய சாஞ்சிலர் ஏஞ்சலா மேர்க்கல் உள்நாட்டு பிரச்சனையால் கட்சித் தலைவர் பதவியையே இழந்துள்ளார். அவருடைய பதவிக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன.

ஐரோப்பாவின் நவீன நெப்போலியன் என்று போற்றப்பட்ட பிரான்சிய அதிபர் எமானுவல் மக்ரொங்க் கூட உள்நாட்டு பிரச்சனையால் செல்வாக்கிழந்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கூட தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே நம்பிக்கை இல்லாப் பிரேரணையை சந்தித்துள்ளார். பிறிக்ஸ்ற் பிரச்சனையை பேசிப் பேசியே ஐரோப்பிய தலைவர்கள் பின்னடைந்துவிட்டதாக மதிப்பீட்டாளர்கள் கூறுகிறார்கள். இரும்புத் தலைவர்கள் இல்லாத ஐரோப்பா உருவாகியிருக்கிறது.

இப்படியான 2018ம் ஆண்டின் முக்கிய போக்குகளே உலகத்தை 2019ம் ஆண்டுக்குள்ளே உந்தித் தள்ளியுள்ளன. இதன் தொடர்ச்சியே வந்துள்ள புதிய ஆண்டின் கதையாக அமையப்போகிறது.

இவ்வாறு இந்த நூற்றாண்டின் முதல் பதினெட்டு ஆண்டுகளில் உலகம் சுழன்ற வேகத்தில்தான் இந்த நூற்றாண்டு முழுவதுமே சுழலப்போகிறது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு பூமி மனிதனால் எச்சரிக்கப்பட்டிருந்தாலும், ஈற்றில் இயற்கையும் மானுடமும் வெல்லும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

இவ்வளவு அழகான பூமியை மனிதனால் அழிக்க முடியாது என்ற நம்பிக்கையை புதுமை வாழ்வு நிறுவிக்கொண்டே முன்னேறும். இதை இயற்கை தனது மொழிகளால் காலம் என்ற கவி வரிகளால் அமைதியாக எழுதிச் செல்கிறது. மகிழ்வுடன் வெற்றி ஆண்டில் உலகம் பிரவேசிக்கிறது.

கி.செ.துரை டென்மார்க் 01.01.2019

Related posts