இலங்கையில் கேட்ட புத்தாண்டு குரல்கள்

01. நீதியோடு கூடிய நிரந்தர அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற வழிவகுக்கட்டும் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார் யாழ். ஆயர்

02. பிறக்கும் ஆண்டில் அனைவருக்கும் நலமும் வளமும் பெருக வாழ்த்துகிறேன் என்று இந்து மத குரு பீடாதிபதி சிவஸ்ரீ தண்டபாணி தேசிகர் கூறுகிறார்.

03. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வாக்கிற்கு இணங்க வாழ வாழ்த்துவதாக நல்லை ஆதீனம் பரமாச்சார்ய சுவாமிகள் கூறுகிறார்.

04. நீதி சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத ஒரு நாட்டுக்குள் நிரந்தர தீர்வை காண்போம் என்று இரா. சம்மந்தன் தெரிவிக்கிறார்.

05. சவால் மிகுந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையப்போகிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தி உள்ளது.

06. ஊழலுக்கு எதிராக புத்தாண்டில் போராடப்போவதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

07. நாட்டில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலங்களுக்கு எதிராக போராட முன்வராவிட்டால் தனது கட்சியை கலைக்கவும் தயார் என்றுள்ளார் முன்னால் வடக்கு முதல்வர்.

இலங்கையின் தலைவர்கள் தாங்கள் உண்மையாகவே புத்தாண்டு செய்தி சொல்ல தகுதியானவர்களா என்ற கேள்வியை அவர்கள் தமக்கு தாமே கேட்க வேண்டிய ஆண்டாகவே இந்த ஆண்டு இருக்கிறது.

காரணம் என்றும் இல்லாதளவுக்கு ஆசிய நாடுகளில் பெறுமதி இல்லாத கடதாசி நாணயம் போல பெறுமதியற்ற நாணயம் என்ற பெயரை சிறீலங்காவின் ரூபா பெற்றிருக்கிறது. அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டால் 19 வீதம் பெறுமதி இழப்பு கண்டுள்ளது.

ஒரு நாட்டின் நாணயப் பெறுமதியை காப்பாற்றத் தெரியாத தலைவர்கள் அந்த நாட்டுக்கு ஒரு பிரகாசமான வாழ்வு வருவதாக புத்தாண்டு செய்தி கூறினால் அந்த நாட்டு நாணயத்தை போலவே அவர்கள் குரலும் பெறுமதியற்று போகுமன்றோ..?

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தம்மளவில் கூட நிறைவேற்ற முடியாத தமிழ் தலைவர்களும் அதே செல்லாக்காசு நாணயங்களாகியிருக்கிறார்கள்.

முதலில் அனைவருமே.. தாங்கள் அரசியல் செய்யவும், தலைமைதாங்கவும் தகுதியானவர்களா என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே இந்த நாணய பெறுமதி வீழ்ச்சி தரும் புத்தாண்டு செய்தியாகும்.

இவர்களோடு மத தலைவர்களும் சேர்ந்தே தோல்வியாளர் ஆகிறார்கள் அவர்களும் இதற்கு பொறுப்பு. மதம் என்பது பொருளாதார பாதுகாப்பு கூறு என்பதை புரிய வேண்டும்.

முதலில் இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்றாவிட்டால் பின் எதையும் காப்பாற்ற முடியாது அது இன்னொரு ஆபிரிக்க சிம்பாப்பேயாக மாறும்.

ஆகவே தலைவர்களும் மதகுருக்களும் நாட்டை இந்த இருள் கிடங்கில் இருந்து மீட்க உதவிவிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறலாம் என்பதே உண்மையான பாரபட்சமற்ற மதிப்பீடாக இருக்கிறது.

இலங்கையின் மக்கள் மிகவும் பொறுப்பற்ற மக்கள் என்று 2019 அழைக்காமல் இருக்கட்டும் என்ற வேண்டுதலே இந்த ஆண்டுக்கான சரியான இலங்கை புத்தாண்டு வேண்டுதலாக இருக்கும்.

அலைகள் 01.01.2019

Related posts